மக்களால் மக்களுக்காக மக்களே தேர்ந்தெடுக்கும் ஆட்சி மக்களாட்சி என அமெரிக்காவின் முன்னாள் பிரதமர் ஆபிரகாம் லிங்கன் வரையறை வகுத்துள்ளார்.
மக்களால் மக்களுக்காக மக்களே தேர்ந்தெடுக்கும் ஆட்சி மக்களாட்சி என அமெரிக்காவின் முன்னாள் பிரதமர் ஆபிரகாம் லிங்கன் வரையறை வகுத்துள்ளார். தற்போது, இந்த வரையறை உலகம் முழுவதும் பரவிக் கிடக்கிறது. இந்த மக்களாட்சி தத்துவப்படி அரசாட்சிகள் கலைக்கப்பட்டு ஜனநாயகம் வென்றுள்ளது. இதன்படி, நாடாளுமன்றம், சட்டமன்றம், நகராட்சி மன்றம்,
ஊராட்சி மன்றம் ஆகியவற்றிற்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்கள் நடைபெறுகின்றன.
இந்த தேர்தல்களில் 18 வயது நிரம்பிய நாட்டின் குடிமக்கள் தங்கள் வாக்குகளை வழங்கி பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இதுவே வாக்குரிமை எனப்படுகிறது. இந்த வாக்குரிமை இந்திய அரசியல் சாசனத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை நிறைவேற்றுவது ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயக கடமையாக உள்ளது.
தேர்தல் ஆணையத்தின் பங்கு :
தேர்தல் ஆணையத்திற்கு தேர்தலை நியாயமாக நடத்துவது மட்டும் கடமையல்லாமல், தேர்தலில் குடிமக்களை 100% வாக்களிக்க செய்ய வேண்டிய பொறுப்பும் உள்ளது. இதற்காக, தேர்தல் ஆணையத்தினர் தொடர்ந்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், இவர்கள் இளம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் கருத்தரங்கங்கள், ஊர்வலங்களை நடத்தி வருகின்றனர். அதேபோல, நாடு முழுவதும் ஆண்டுதோறும் ஜனவரி 25-ம் தேதி தேசிய வாக்காளர் தினம் கடைபிடிக்கப்பட்டு, வாக்குரிமையின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
வாக்குரிமையும்..! கட்டாயமும்..!
வாக்குரிமை என்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாக உள்ளது. இருப்பினும், 100 சதவீதம் வாக்குப்பதிவு என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை வாக்குரிமை கடமையாக பார்க்கப்படுகிறது. ஆனால், பல நாடுகளில் வாக்குரிமை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மேலும், தேர்தலில் வாக்களிக்காதது சட்டப்படி குற்றமாகவும் உள்ளது. குறிப்பாக, பெல்ஜியம், ஆஸ்திரேலியா, செக்கோஸ்லோவாக்கியா, மெக்சிகோ போன்ற நாடுகளில் நடைபெறும் தேர்தல்களில் அனைவரும் வாக்களித்தாக வேண்டும் என்ற சட்டம் உள்ளது. வாக்களிக்காதவர் தக்க காரணம் காட்டவில்லையெனில், அபராதமோ அல்லது சிறை தண்டனையோ விதிக்கப்படுகிறது.
வாக்குரிமை கேட்கும் 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் :
"108" ஆம்புலன்ஸ் சேவையில் பைலட், இ.எம்.டி., கால் சென்டர் பணியாளர்கள் என மொத்தம் 5,000-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இதில், 3,000-க்கும் மேற்பட்டோர் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து வெவ்வேறு மாவட்டங்களில் பணி செய்து வருகின்றனர்.
மேலும், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களைப் பொறுத்தவரை சாதாரண நாட்களை விட மக்கள் அதிகமாகக் கூடும் நாட்களில் தான் உயிர்காக்கும் தேவை அதிகமாக இருக்கும். அப்படித்தான் வாக்குப்பதிவு நாளன்று மற்ற நாட்களைவிட உயிர் காக்கும் பணிகள் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு அதிகமாக இருக்கும். ஏனென்றால், தேர்தலன்று 18 வயது தொடங்கி வயது முதிர்ந்து நடக்கமுடியாமல் சக்கர நாற்காலிகளில் வருபவர்கள் வரை ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுவார்.
அப்போது, வெகு நேரம் காத்திருக்கும் முதியவர்களும், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களும் மயக்கமடைவதும், உடல்நிலை மோசமாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதும் அதிகம். இப்படி பாதிக்கப்படுபவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் தயார் நிலையில் இருந்து வருகின்றனர்.
ஆனால், இவர்களின் ஜனநாயகக் கடமை தியாகத்தாலும், அலட்சியங்களினாலும் பறிக்கப்படுவதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
செவிசாய்க்காத தேர்தல் ஆணையம் :
கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தல்கள், ஒரு நாடாளுமன்றத் தேர்தல் என மூன்று தேர்தல்களிலும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் வாக்களிக்கும் உரிமையை கேட்டு வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, இவர்கள் இரண்டு தேர்தல்களில் தேர்தல் ஆணையாளரை சந்தித்து தங்களின் வாக்குரிமையை கோரிக்கையாக வைத்துள்ளனர். ஆனால், தேர்தல் ஆணையம் இது தொடர்பாக பரிசீலிப்பதாக தெரிவித்தது. ஆனால், இதுவரை அவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.
தபால் ஓட்டு கேட்கும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் :
100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்ற நோக்கில் தபால் ஓட்டு முறை தேர்தல் ஆணையத்தால் கொண்டுவரப்பட்டது. மேலும், தேர்தல் பணியில் ஈடுபடும் காவல் துறையினர் உட்பட அரசு ஊழியர்கள் அனைவரும் அவர்களின் சொந்தத் தொகுதியிலிருந்து வேறு தொகுதிக்கு நியமிக்கப்படுவதால், அவர்கள் தபால் ஓட்டின் மூலம் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
ஆனால், அரசின் உயிர் காக்கும் சேவையில் பணியாற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை. இது அவர்களின் ஜனநாயக கடமையை பறிக்கிறது என தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அரசு துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு தபாலில் வாக்களிக்கும் உரிமையை கொடுத்த தேர்தல் ஆணையமும், அரசும், எங்களின் நியாயமான கோரிக்கையை அலட்சியப்படுத்துவது ஏன்..? எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதேபோல, 100 % வாக்குப்பதிவு வலியுறுத்தி தேர்தல் ஆணையம் லட்சக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை விளம்பரப்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு ஓட்டும் ஜனநாயக கடமை எனவும் பரப்புரை செய்து வருகின்றனர்.
ஆனால், வெளி மாவட்டங்களில் பணிபுரிந்து வரும் 3,000-க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் தங்கள் வாக்குரிமையை இழந்து வருகின்றனர். ஆகவே, இந்த முறை தேர்தல் ஆணையம் தபால் ஓட்டோ அல்லது பணி செய்யும் இடத்திலேயே 108 தொழிலாளர்களின் வாக்குரிமையை பெற்றுத்தர வேண்டும் என ஒட்டுமொத்த தொழிலாளர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் தொழிற்சங்கத்தின் மாநில பொது செயலாளர் ராஜேந்திரன் கூறியதாவது :- நம் நாட்டில் பெரும்பான்மையினராக உள்ள தொழிலாளர்களில் ஒரு பகுதியினரான 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் வாக்குரிமை கடந்த தேர்தல்களில் பறிக்கப்பட்டு வருகிறது. இந்த வாக்குரிமையை கேட்டு 2 சட்டமன்ற தேர்தல், ஒரு நாடாளுமன்றத் தேர்தல் என 3 தேர்தலின் போது, தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கையை வைத்துவிட்டோம். ஆனால், தேர்தல் ஆணையம் எங்கள் விவகாரத்தைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஒவ்வொரு வாக்கும் விலை மதிப்பற்றது என கூறும் தேர்தல் ஆணையம், எங்களின் ஆயிரக்கணக்கான வாக்குகளை பறித்து வருவது எங்கள் ஜனநாயக கடமையை பறிப்பதாக உள்ளது. ஆகவே, வரும் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் வாக்களிக்க தேவையான உதவியை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தித் தர வேண்டும். இல்லையெனில், நாங்கள் நீதிமன்றத்தை நாட உள்ளோம், என தெரிவித்தார்.
தொழிலாளர் தரப்பில் வாக்களிப்பதற்கான உரிமையைக் கேட்டு கடந்த மூன்று தேர்தல்களில் வலியுறுத்தப்பட்டு வந்தாலும், நிர்வாகத் தரப்பில் தொழிலாளர்களின் வாக்குரிமைக்கான முயற்சியை எடுத்திருந்தால், அவர்களின் ஜனநாயக கடமை எப்பொழுதோ நிறைவேற்றப்பட்டிருக்கும் என பொது தளத்தில் பேசப்படுகிறது. மேலும், வரும் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறும் தேர்தலிலாவது 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் வாக்களிக்க நிர்வாகம் தங்களின் முயற்சியை எடுக்குமா..? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.