கோவை : கடந்த மாதம் மூளைச்சாவடைந்த தனியார் நிறுவன ஊழியரின் உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானமாக வழங்கப்பட்டது.
கோவை : கடந்த மாதம் மூளைச்சாவடைந்த தனியார் நிறுவன ஊழியரின் உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானமாக வழங்கப்பட்டது.
சூலூர் குருவம்மாள் நகரைச் சேர்ந்தவர் ஏ. மதியழகன் (47). இவர் தனது மனைவி மோகனா, மகள் நிவேதிதா மற்றும் மகன் தனுஷ், ஆகியோருடன் வசித்து வந்தார். இவர் கடந்த மாதம் இரத்த அழுத்தம் அதிகமாகி மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைபட்டதன் காரணமாக, திடீரென்று சுயநினைவை இழந்தார். உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை, அவிநாசி ரோடு கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டது. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும், அவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில், அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவரது மனைவி மோகனா உள்பட அவரது உறவினர்கள், மதியழகன் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். அவரது, சிறுநீரகங்கள், கண்கள், தோல் மற்றும் எலும்பு ஆகியவை தானமாகப் பெறப்பட்டது. சிறுநீரகங்கள், கண்கள், தோல் மற்றும் எலும்பு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டது.
இது குறித்து கே.எம்.சி.எச். மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல ஜி பழனிசாமி கூறுகையில், "மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால், அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். பின்னர், உடல் உறுப்பு தானம் வழங்கிய ஏ. மதியழகன் குடும்பத்திற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று கூறினார்.