கோவை : பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவையில் வழக்கறிஞர்கள் இரண்டாவது நாளாக நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை : பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவையில் வழக்கறிஞர்கள் இரண்டாவது நாளாக நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்கக் கோரி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 70 ஆயிரம் வழக்கறிஞர்கள் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக, கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த சுமார் 2,000-க்கும் மேற்பட்டோர் இன்று இரண்டாவது நாளாக நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதோடு, பொள்ளாச்சி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணையை உயர்நீதிமன்ற பெண் நீதிபதி தலைமையில் நேரடியாக மேற்பார்வை செய்ய வேண்டும் என வலியுறுத்தி நீதிமன்ற வாயில் முன்பாக கையில் பதாகைகள் ஏந்தியவாறு பெண் வழக்கறிஞர்கள் உட்பட 70-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இந்த வழக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனை பணிநீக்கம் செய்வதோடு, அவரை முதன்மை குற்றவாளியாக இணைக்க வேண்டும் என்றும், அவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நிதி கிடைக்கும் வரை வழக்கறிஞர்களின் போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.