கோவை : தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், கோவையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 5.83 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை : தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், கோவையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 5.83 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நேற்று மாலை
கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரிடம் குனியமுத்தூர் சுகுணாபுரம் சோதனை சாவடியில் ஆவணங்கள் இல்லாத ரூ. 83 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல, கோவை கருப்பண்ண கவுண்டர் வீதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கனகராஜ் தலைமையிலான குழுவினர், இரண்டு சக்கர மற்றும் 4 சக்கர வாகன சோதனை மேற்கொண்டு வந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த நபர்களிடம் சோதனை மேற்கொண்டனர். அதில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ. 5 லட்சத்தை பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து, பறக்கும் படை அதிகாரிகள் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில் அரசன் அவர்களிடம் ஒப்படைத்தனர்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோவையில் பல்வேறு பகுதிகளில் பறக்கும் படை அதிகாரிகள் தொடர்ந்து சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல, பின்னர் முறையான ஆவணங்கள் காண்பிக்கப்பட்டு உறுதி செய்யப்படும் போது, அந்தப் பணம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.