திருப்பூர் : வரும் நாடாளுமன்ற தேர்தலில் திருப்பூர் தொகுதியில் சி.பி.ஐ. சார்பில் கே. சுப்பராயன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கோவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே. சுப்பராயன், திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள சி.பி.ஐ கட்சிக்கு திருப்பூர் மற்றும் நாகப்பட்டினம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், திருப்பூர் தொகுதியில் கே. சுப்பராயனும், நாகப்பட்டினத்தில் செல்வராஜும் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பூர் திருப்பூர் கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த 71 வயதான மூத்த அரசியல் தலைவர் கே. சுப்பராயன், கட்சியின் முழுநேர ஊழியர். வெறும் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவருக்கு, தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகள் தெரியும். 1967-ம் ஆண்டு கட்சியில் இணைந்த இவர், 1972-ம் ஆண்டு திருப்பூர் வட்டச் செயலாளராகப் பதவி வகித்தார். கோவை மாவட்ட செயலாளர், தேசிய குழு உறுப்பினராகவும் இருந்தார். தேசியக்குழு மற்றும் மாநில செயற்குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு ஏ.ஐ.சி.யூ.சி., மாநில தலைவராக உள்ளார்.
கடந்த 1984-89 மற்றும் 1996 - 2001 வரையில் தமிழக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவராவார். 2004-ம் ஆண்டு கோவை நாடாளுன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இவர்,கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் வேட்பாளராக நின்று தோல்வியைத் தழுவினார். தற்போது, தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பை பெற்றுள்ளார் கே.சுப்பராயன்.