கோவை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என 2,000-க்கும் மேற்பட்டோர் பொள்ளாச்சி காந்தி சிலை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என 2,000-க்கும் மேற்பட்டோர் பொள்ளாச்சி காந்தி சிலை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து பணம் மிரட்டிய சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தொடர்புடைய பிற குற்றவாளிகளையும் விரைந்து கைது செய்ய வேண்டும் என தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதி விசாரணை கோரி அனைத்து கட்சியினர் சார்பில் பொள்ளாச்சி காந்திசிலை முன்பு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம், தி.மு.க., த.பெ.தி.க. மற்றும் மாதர் சங்கத்தினர் 2,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். குறிப்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி, த.பெ.தி.க.வின் பொதுச்செயலாளர் கு. ராமகிருஷ்ணன், திருநங்கை கல்கி சுப்பிரமணியம், ம.தி.மு.க. இளைஞரணி செயலர் ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பொள்ளாச்சி காந்தி சிலை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும், பொறுப்பற்ற எடப்பாடி ஆட்சியைத் தூக்கி எறிய வேண்டும், பெண் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், இந்த வழக்கில் நீதி விசாரணை வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத்தால், அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.