கோவை : பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை 4 நாட்கள் சி.பி.சி.ஐ.டி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க கோவை மாவட்ட நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
கோவை : பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை 4 நாட்கள் சி.பி.சி.ஐ.டி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க கோவை மாவட்ட நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
பொள்ளாச்சி கல்லூரி மாணவி பாலியல் வழக்கில் கைது செய்து சிறையில் வசந்தகுமார், திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் அரசியல் தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள அரசாணை வெளியிட்டிருந்த நிலையிலும், இன்னும் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்படவில்லை. இந்த நிலையில், பொள்ளாச்சியை அடுத்த மாக்கினம்பட்டியில் உள்ள திருநாவுக்கரசு இல்லத்தில் நேற்று சி.பி.சி.ஐ.டி., போலீசார் மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது, திருநாவுக்கரசர் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதனிடையே, முக்கியக் குற்றவாளி திருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி. போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வர இருப்பதால், திருநாவுக்கரசு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விசாரணை நடைபெறவிருந்த இடத்திற்கு அருகே அதிகளவு வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் குவிந்துள்ளனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எனவே, சட்டம், ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டு திருநாவுக்கரசை ஆஜர்படுத்துவதை போலீசார் தாமதப்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி, பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதனடிப்படையில், குற்றவாளியிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரிக்க நீதிபதி நாகராஜன் முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து, குற்றவாளி திருநாவுக்கரசிடம் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், 4 நாட்கள் சி.பி.சி.ஐ.டி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க கோவை மாவட்ட நீதிமன்ற நீதிபதி நாகராஜன் அனுமதியளித்தார். பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை 10 நாட்கள் போலீஸ் காவல் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியிருந்த நிலையில், 4 நாட்கள் மட்டும் அனுமதி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், எந்த ஒரு மனித உரிமை மீறலும் இந்த விசாரணையின் போது இருக்கக் கூடாது என சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே, பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் வீடியோ கான்பரஸிங் மூலம் நடத்தப்பட்ட விசாரணை, கோவை நீதிமன்றத்தில் முதல் முறை என வழக்கறிஞர் எலிசபத் ராணி தெரிவித்தார்.