2019 - கோவை தேர்தல் களம்: நெருக்கடி நிலையை ஆதரித்த ஒரே கட்சி

சுதந்திர இந்தியாவின் இருண்ட காலம், நெருக்கடி நிலை காலம். இந்த காலகட்டத்தில் பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் நெருக்கடிக்குள்ளாகின. நெருக்கடி நிலையை பல்வேறு கட்சிகளும் எதிர்த்தன. ஏன் காங்கிரஸ் கட்சிக்குள்ளும் எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. ஆனால் ஒரேயொரு கட்சி வெளிப்படையாக ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றி ஆச்சரியப்படுத்தியது. அது தமிழகத்தில் புதிதாக துளிர் விட்டிருந்த, அதிமுக.


சுதந்திர இந்தியாவின் இருண்ட காலம், நெருக்கடி நிலை காலம். இந்த காலகட்டத்தில் பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் நெருக்கடிக்குள்ளாகின. நெருக்கடி நிலையை பல்வேறு கட்சிகளும் எதிர்த்தன. ஏன் காங்கிரஸ் கட்சிக்குள்ளும் எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. ஆனால் ஒரேயொரு கட்சி வெளிப்படையாக ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றி ஆச்சரியப்படுத்தியது. அது தமிழகத்தில் புதிதாக துளிர் விட்டிருந்த, அதிமுக.










அதிமுக உருவான கதை 



அண்ணா ஆட்சியை பிடிக்கவும், அடுத்து ’கலைஞர்’ கருணாநிதி அரியணையேறவும் வேறொருவரின் பங்களிப்பு முக்கியமானது. அது மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன் என்ற எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் கருணாநிதி, அண்ணாதுரை, எஸ்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் முற்போக்கு கருத்துக்களை பேசினாலும், திமுக என்ற கட்சியை மக்களிடம் கொண்டு சேர்ந்தது, எம்.ஜி.ஆர். திமுகவில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்த எம்.ஜி.ஆருக்கும், திமுக தலைவர் கருணாநிதிக்கும் இடையே விரிசல்கள் வேர்விட துவங்கியது.



அமைச்சர் பதவி மறுப்பு, மு.க.முத்து முக்கியத்துவம் என கட்சியில் ஓரம் கட்டப்படுவதாக உணர்ந்த திமுக பொருளாராக இருந்த எம்.ஜி.ஆர், ஒரு பொதுக்கூட்டத்தில், திமுகவினர் ’குடும்ப சொத்து கணக்கு’ காட்ட வேண்டுமென அறிவித்தார். எம்.ஜி.ஆர். திமுகவில் இருந்து நீக்கப்பட, 1972 ம் ஆண்டு அக்டோபர் 17 ம் தேதி அண்ணா திமுக உருவானது. அன்று முதல் இன்று வரை கருணாநிதி எதிர்ப்பு என்பது அக்கட்சியின் அடிப்படை கொள்கையாக இருக்கின்றது.



அதிமுக துவங்கப்பட்ட காலத்தில் திமுகவில் இருந்து, அதிமுகவிற்கு பெரிய இடப்பெயர்வு நடக்கவில்லை. கொள்கைகளால் வார்க்கப்பட்ட திமுக எனும் கோட்டையில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்கள், மூத்த தலைவர்கள் வெளியேற தயங்கினர். ஆனால் பின்னாளில் மக்களின் பிரம்மாண்ட ஆதரவை பார்த்த பிறகு, பலரும் மெல்ல, மெல்ல அதிமுகவில் கரை ஒதுங்கினர். எம்.ஜி.ஆரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் திமுக அமைச்சரவை மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தின. ஒரு பக்கம் எம்.ஜி.ஆர், மறுபக்கம் இந்திரா என்ற இரட்டை நெருக்கடியை திமுக சந்தித்தது.

இந்திரா என்றால் இந்தியா!

1975 ஜீன் 25 நள்ளிரவு. குடியரசு தலைவர் பக்ரூதின் அலி அகமது ஒரு அறிவிப்பை வெளியிட்டார். “உள்நாட்டு சக்திகளால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதால், இந்திய அரசியலமைப்பு சட்டம் 352 வது பிரிவின்படி, நாடு முழுவதும் நெருக்கடி நிலையை இன்று முதல் அமலுக்கு கொண்டு வர உத்தரவிடுகிறேன்” என்பதே அது.



அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நடந்த ரேபரேலி தேர்தல் வழக்கில், பிரதமர் இந்திராகாந்தி வெற்றி பெற்றது செல்லாது என தீர்ப்பு வந்தது. அதிர்ந்து போன இந்திரா, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து பதவியை தக்க வைத்தார். இந்திராவிற்கு ஏற்பட்ட நெருக்கடிகளை சமாளிக்க, இந்தியா தேசம் முழுதும் நெருக்கடிக்கு ஆளானது. இது ”இந்திய ஜனநாயகத்திற்கு ஆபத்து” என்றனர், எதிர்கட்சிகள். ”இந்தியா என்றால் இந்திரா, இந்திரா என்றால் இந்தியா” என உறுதியாக நின்றனர், இந்திரா காங்கிரஸ் தலைவர்கள். எதிர்த்த எதிர்கட்சியினரும், சொந்த கட்சியினரும் சிறைக்கு அனுப்பப்பட்டனர். பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்பட்டு தணிக்கை முறை வந்திருந்தது. 



இந்திரா காங்கிரஸ் உடனான மோதல், நெருக்கடி நிலை எதிர்ப்பு திமுக ஆட்சி கலைப்பிற்கு அடிப்படைகளாகின. ”தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதால், அரசியல் சட்டப்பிரிவு 356 படி தமிழக அரசு கலைக்கப்படுகிறது” என்ற அறிவிப்பில் திமுகவின் ஒன்பது ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது. கருணாநிதி உள்ளிட்டோர் மீது விசாரணை நடத்த நீதிபதி சர்க்கரியா தலைமையில் விசாரணை கமிஷனும் அமைக்கப்பட்டது.

காத்திருந்த படுதோல்வி

நீதிமன்றத்தால் உருவான நெருக்கடியை சட்ட திருத்தத்தினால் சமாளித்த இந்திரா காந்தி, 1977 ம் ஆண்டில் 6 வது மக்களவை பொதுத்தேர்தலுக்கு தயாரானர். எதிர்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரட்டும் முயற்சியாக, ஜனசங்கம், ஸ்தாபன காங்கிரஸ், பிரஷா சோஷலிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்து உருவானது, ’ஜனதா’. மக்களிடம் ஜனதா என்றாலும், பாரதிய லோக் தளம் என்ற கட்சி சார்பில் ஏர் உழவன் சின்னத்தில், மொரார்ஜிதேசாய், ஜெகஜீவன் ராம், வாஜ்பாய் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். 



மக்களவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டாலும், தமிழக சட்டமன்றத்திக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இந்திய தேசிய காங்கிரஸ் என பெயர் மாறியிருந்த இந்திராகாந்தியின் கூட்டணியில், இந்திய கம்யூனிஸ்ட், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இருந்தன. மறுமுனையில் திமுக கூட்டணியில் சிபிஎம், ஜனதா கட்சிகள் இருந்தன. இந்திய தேர்தல் களம் இந்திராவிற்கும், ஜனதாவிற்குமான போட்டியாகவும், தமிழ்நாடு தேர்தல் களம் எம்.ஜி.ஆருக்கும், கருணாநிதிக்குமான போட்டியாக இருந்தது.



மீண்டும் வென்ற பார்வதி கிருஷ்ணன்

தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பேரடியாக விழுந்தது. முதல் முறையாக ஆட்சியை இழந்து, காங்கிரஸ் எதிர்கட்சியாக மாறியது. ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. மொரார்ஜி தேசாய் பிரதமரானர். ஆனால் அதற்கு நேர்மாறாக தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் அதிமுக-காங்கிரஸ்-சிபிஐ கூட்டணிக்கு சாதகமாக வந்தது. 



தமிழகம் மற்றும் இந்திய அளவில் பல மாற்றங்களுக்கு அடிப்படையாக இத்தேர்தல் முடிவுகள் அமைந்தது. ஆனால் கோயமுத்தூர் தொகுதியில் எந்த மாற்றமும் இருக்கவில்லை. அதே கட்சி, அதே வேட்பாளர், அதே கூட்டணி. சிபிஐ கட்சி எம்.பி. பாலதண்டாயுதம் விமான விபத்தில் உயிரிழந்ததால், வந்த இடைத்தேர்தலில் அமைந்த கூட்டணி, இத்தேர்தலிலும் தொடர்ந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பார்வதி கிருஷ்ணன், அதிமுக கூட்டணி ஆதரவுடன் களமிறங்கினார். ஸ்தாபன காங்கிரஸ் சார்பில் லட்சுமணன் போட்டியிட, கோவை தேர்தல் களத்தில் இரண்டு பேர் மட்டுமே இருந்தனர். 21 ஆயிரத்து 178 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பார்வதி கிருஷ்ணன் மூன்றாவது முறையாக மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.



கோவையில் தொடர்ந்து வென்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு, அடுத்தடுத்த தேர்தல்களில் தொடர் தோல்விகள் காத்திருந்தது. 

தொடரும்…

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...