திமுக தலைவராக ஸ்டாலின் எதிர்கொள்ளும் முதல் தேர்தல் இது. அதிமுக – பாஜக கூட்டணியை வீழ்த்தி தனது ஆளுமையை நிரூபிக்க காத்திருக்கிறார். அதற்க்கேற்ப பாஜக எதிர்ப்பு என்ற புள்ளியில் அணி திரண்டதோழமை கட்சிகளை ஒருங்கிணைத்து, கூட்டணியாக மாற்றியதில் முன்னிலையில் இருந்தது திமுக. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையையும் சுமூகமாக முடித்தது.
திமுக தலைவராக ஸ்டாலின் எதிர்கொள்ளும் முதல் தேர்தல் இது. அதிமுக – பாஜக கூட்டணியை வீழ்த்தி தனது ஆளுமையை நிரூபிக்க காத்திருக்கிறார். அதற்க்கேற்ப பாஜக எதிர்ப்பு என்ற புள்ளியில் அணி திரண்டதோழமை கட்சிகளை ஒருங்கிணைத்து, கூட்டணியாக மாற்றியதில் முன்னிலையில் இருந்தது திமுக. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையையும் சுமூகமாக முடித்தது.
அதன்படி கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதிகளை ஒதுக்கியதோடு, 20 தொகுதிகளில் போட்டியிடுவது என அறிவித்தது. சின்னம் கிடைக்காத சில கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில், போட்டியிட வைக்கவும் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இறுதி செய்யப்பட்ட தொகுதி பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் கூட்டணி கட்சியினர் முன்னிலையில் வெளியிட்டுள்ளார் கோவையில் சிபிஎம் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகளை பெற்றிருந்தது. அதன்படி கோவை, மதுரை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

1967 ம் ஆண்டில் இருந்து கோவை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலை சந்தித்து வருகிறது. கோவை மக்களவை தொகுதியில் 1967, 1971, 1984, 1989, 1991, 1996, 2009, 2014 என 8 முறை போட்டியிட்டுள்ளது. அதில் இரண்டு முறை வெற்றியும் பெற்றுள்ளது. கோவை தொகுதியில் போட்டியிட்ட முதல் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த அக்கட்சி, வெற்றி பெற்றது. கே.ரமணி வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு சென்றார்.
ஆனால், அதன் பின்னர் நடந்த தேர்தல்களில் வெற்றி கைகூடவில்லை. நீண்ட இடைவெளிக்கு பின்னர், 2009 ம் ஆண்டு அதிமுக கூட்டணியோடு, களமிறங்கிய சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வெற்றி பெற்றார்.
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1967, 1984, 1989, 1991 என 4 முறை கோவை தொகுதியில் போட்டியிட்டுள்ளது. அதில் 1967 ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஐந்தாவது முறையாக திமுக கூட்டணியில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவையில் போட்டியிட உள்ளது.
அதிமுக கூட்டணியில் அக்கட்சி 2009 ல் ஒரு முறை கோவையில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளது. 1971 ம் ஆண்டு தனித்து போட்டியிட்டும், 1996 ல் மதிமுக கூட்டணியிலும், 2014 ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோடு கூட்டணி அமைத்து போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளது.

1967 ல் வெற்றி பெற்ற கே.ரமணி, 1971 தேர்தலில் மீண்டும் போட்டியிட்டார். ஆனால் தனித்து அக்கட்சி போட்டியிட்டதால் 3 வது இடத்திற்கு தள்ளப்பட்டார். இதன் பின்னர் 1984 மற்றும் 1989 தேர்தல்களில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் ஆர்.உமாநாத், இரண்டு முறையும் ஒரு இலட்சத்திற்கும் மேலான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, இரண்டாம் இடம் பிடித்தார். 1991 ல் மீண்டும் போட்டியிட்ட கே.ரமணியும் தோல்வியடைந்தார். 1996 ல் மதிமுகவோடு கூட்டணி
அமைத்து போட்டியிட்ட அக்கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராசன் 3 ம் இடம் பிடித்தார். 2014 ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோடு சேர்ந்து போட்டியிட்ட அக்கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராசன் 5 வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
வேட்பாளர் யார்?
கோவையில் போட்டியிட வேண்டுமென்பதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக இருந்தது. அதற்கேற்ப திமுகவிடம் கேட்டு பெற்றுள்ளது. இம்முறை திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ள கூட்டணியில் சிபிஎம் அங்கம் வகிக்கிறது. அதேசமயம் மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவும் இருக்கிறது.
ஆக கூட்டணி கட்சி வாக்குகள் பலம் சேர்க்கும். அதிமுக பிளவு, அமமுக வாக்கு பிரிப்பு, ஆளுங்கட்சிகள் மீதான அதிருப்தி, கணிசமான வாக்கு வங்கி, தொழிற்சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வாக்குகள், சிறுபான்மையினர் வாக்குகள் உள்ளிட்டவையும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சாதகமானவை.
எனவே, வெற்றியை எட்டி பிடிக்கும் முனைப்பில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களமிறங்குகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் வேட்பாளர் போட்டியில் பி.ஆர். நடராசன், சி.பத்மநாபன், ராமமூர்த்தி ஆகியோர் இருக்கின்றனர்.

கோவை மக்கள் அறிந்த முகமான பி.ஆர்.நடராசனுக்கே வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
அதேசமயம், கோவையில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. ஆக, கோவை தேர்தல் களத்தில் தாமரையை எதிர்த்து, சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் போட்டியிட உள்ளது. வேட்பாளர் தேர்வும் தேர்தல் வெற்றியில் முக்கிய பங்காற்றும் என்பதால், வேட்பாளர் தேர்வில் அதிக கவனம் செலுத்தக்கூடும்.
எப்படி இருப்பினும் எந்த கட்சியும் எளிதில் வெல்ல முடியாது என்பதே கணிப்பாக உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், பாஜகவிற்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது.