கோவை : பொள்ளாச்சியில் இளம்பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் வெளிப்படையான விசாரணை வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் குண்டு கட்டாக அகற்றினர்.
கோவை : பொள்ளாச்சியில் இளம்பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் வெளிப்படையான விசாரணை வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் குண்டு கட்டாக அகற்றினர்.

பொள்ளாச்சியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகள் உள்பட ஏராளமான இளம்பெண்களை 4 பேர் கொண்ட பாலியல் வன்கொடுமை செய்தது. பின்னர், அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து பணம் மிரட்டி வந்துள்ளனர். இது தொடர்பாக, திருநாவுக்கரசு, சபரி ராஜன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், பொள்ளாச்சி - பாலக்காடு சாலையில் இருக்கும் நீதிமன்ற குடியிருப்பு வளாகம் முன்பு இளம்பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் வெளிப்படையான விசாரணை வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றும், கைது செய்யப்பட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனவும் மாணவர்கள் கோஷங்களையும் அவர்கள் எழுப்பி வந்தனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். இதற்கு மறுப்பு தெரிவித்த மாணவர்கள், போலீசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தலைமையிலான காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், எந்தவித உடன்பாடும் எட்டப்படாததையடுத்து, மாணவர்களை குண்டுகட்டாக தூக்கிச் சென்று போலீசார் அப்புறப்படுத்தினர். மேலும் பெண்கள் என்றும் பாராமல், போலீசார் தரதரவென இழுத்துச் சென்ற சம்பவங்கள் பொள்ளாச்சி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.