கோவை: அ.தி.மு.க.வின் 37 எம்.பி.களால் எந்த பலனும் இல்லை என்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா சொல்லி இருப்பது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
கோவை: அ.தி.மு.க.வின் 37 எம்.பி.களால் எந்த பலனும் இல்லை என்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா சொல்லி இருப்பது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
கோவை கொடிசியாவில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தனின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட பின் சென்னை செல்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தார். அங்கு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததாவது :- தே.மு.தி.க.,வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகின்றது. தொகுதி பங்கீடு குறித்து விரைவில் முடிவு வரலாம். தன்னை அலுவலகத்தில் யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். கே.சி.பழனிச்சாமி தன்னை முதலமைச்சர் என்ற முறையில் சந்தித்தார். இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்டது தி.மு.க. ஆட்சிதான். ஊழல் குற்றசாட்டுகளை தி.மு.க. ஆதாரத்துடன் சொல்ல வேண்டும், என்றார்.

கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில சி.பி.எம் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கமிஷன் ஆட்சி என்று அ.தி.மு.க. ஆட்சியை விமர்சனம் செய்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்ததாவது :- இப்படி பேசி பேசி தான் அவர்கள் அரை பர்சண்ட் ஓட்டு வாங்குகிறார்கள். கூட்டணி சேரவில்லை எனில் கம்யூனிஸ்ட் கட்சி காணாமல் போகிவிடும். 40 தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு கொடுத்தவர்களை அழைத்து திங்கள், செவ்வாய் கிழமைகளில் அழைத்து ஆய்வு நடத்த இருக்கிறோம்.
அ.தி.மு.க.வின் 37 எம்.பி.களால் தமிழகத்திற்கு எந்த பலனும் இல்லை என்று பிரேமலதா சொல்லி இருப்பது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. கூட்டணி கட்சியை சேர்ந்த பிரதமர் இல்லாததால்,
இவ்வளவு எம்.பி.க்கள் இருந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று தான் பிரேமலதா தெரிவித்துள்ளார். பிரேமலதா சொன்னதன் கருவை புரிந்து கொள்ள வேண்டும், எனக் கூறினார்.
மேலும், மோடிதான் எங்கள் டாடி என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியிருப்பது குறித்த கேள்விக்கு பதில் கூறியதாவது :- கூட்டணி அமைத்த பின்னர் அது வலுபெற வேண்டும் எனவும் கூட்டணி அமைத்த பின்னர் ஒன்றிப்போக வேண்டும் என்ற அர்த்தத்தில் அவர் பேசினார். பா.ஜ.க. கூட்டணியில் இருந்து 1991-ல் அ.தி.மு.க. வெளியே வந்தபின், 5 ஆண்டு பா.ஜ.க. கூட்டணியில் தி.மு.க. தான் இருந்தது. இது குறித்து பத்திரிகையாளர்கள் யாரும் கேட்பதில்லை. என்னை மட்டும் திரும்ப திரும்ப கேட்கின்றீர்கள். பா.ஜ.க.வை மதவாத கட்சி, மக்கள் விரோத கட்சி என்று சொன்னவர்கள், அப்போது ஏன் கூட்டணி சேர்ந்தார்கள்..?. காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி சரியான கூட்டணியா..?. இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு காரணமான காங்கிரசுடன் கூட்டணி என்பது வெட்கக்கேடானது.
தே.மு.தி.க.வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. பிரதமர் விழாக்களை மத்திய அரசு ஏற்பாடு செய்கிறது. இந்த விழாக்களில் பங்கேற்க தமிழகம் வரும் பிரதமர் மோடி, அப்படியே கூட்டணிக் கட்சிகளின் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசுகின்றார். அதில், என்ன தவறு இருக்கின்றது. அரசு சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கின்றது. 12 ஆண்டு மத்தியில் ஆட்சியில் இருந்தவர்கள் இதுவரை என்ன திட்டம் கொண்டு வந்தார்கள். தமிழக மக்களின் நலனுக்காக பலமுறை தமிழகத்திற்கு வந்து திட்டங்களை திறந்துவைத்துள்ளார் பிரதமர். இதனால், எதிர் கட்சிகளுக்குதான் ஆத்திரம், என்றார்.
முன்னதாக, சேலத்தில் இருந்து கார் மூலம் கோவை வரும் வழியில் முதலைச்சர் எடப்பாடி பழனிசாமி, பவானி நகர் பகுதியில் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
