கோவை : இந்து மதத்திற்கும், தேசத்திற்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய ஓவியக் கண்காட்சி குறித்து சென்னை லயோலா கல்லூரி வருத்தம் தெரிவித்துள்ளது.
இந்து மதத்திற்கும், தேசத்திற்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய ஓவியக் கண்காட்சி குறித்து சென்னை லயோலா கல்லூரி வருத்தம் தெரிவித்துள்ளது.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் நேற்று ஓவிய கண்காட்சி நடைபெற்றது. ஆனால், கண்காட்சியில் இந்து மத உணர்வுகளை காயப்படுத்தும் விதமாகவும், பிரதமர் மோடியை விமர்சித்தும் சித்திரங்கள் இடம்பெற்றிருந்தன.
அதில், "டாலர்மயமாகும் ராமராஜ்ஜியம்" என்ற தலைப்பில் இடம்பெற்றிருந்த ஓவியத்தில், இந்துக்கள் தெய்வமாக வழிபடும் ராமரின் கையிலிருக்கும் வில், அமெரிக்க ரூபாயான டாலர் வடிவமாக மாற்றி வரையப்பட்டிருந்தது.
இதேபோன்று, பிரதமர் நரேந்திர மோடியை அனுமனாக சித்தரித்து மற்றொரு ஓவியம் இக்கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது. "ஏகாதிபத்யதாசன்" என்ற தலைப்பிலான இந்த ஓவியத்தில், அனுமனின் இடது கையில் உள்ள கதையின் மேற்புறம் அமெரிக்க தேசியக்கொடி ஒட்டப்பட்டும், அவரது வலதுகையால் இந்தியாவின் வளங்களையெல்லாம் பெருமுதலாளிகளுக்கும், அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகளுக்கும் தாரைவார்க்கப்படுவது போன்ற கருத்தும் விவரிக்கப்பட்டிருந்தது.
மேலும், எழுத்தாளர் கௌரி லங்கேஷ் கொலையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் கொலை செய்தார்கள் என உரைக்கும் ஓவியமும் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது.
"மீடு" பிரச்சினையை பாரத மாதாவுடன் இணைத்தும், "தூய்மை இந்தியா" திட்டத்தை காந்தியத்துடன் சேர்த்தும், ரஃபேல் விமான விவகாரத்தையும், பா.ஜ.க.வையும் சம்பந்தப்படுத்தியும் எதிர்மறை கருத்துக்களுடனான ஓவியங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற இந்தக் கண்காட்சி பா.ஜ.க.,மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்து மதத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாகவும், தேசநலனுக்கு எதிரான கருத்துகளை பரப்பும் வகையில் நடந்த இந்த ஓவிய கண்காட்சியின் ஏற்பாட்டாளர்கள் மற்றும் ஓவியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், இந்து மதம் குறித்த சர்ச்சைக்குரிய ஓவியங்கள் இடம்பெற்ற விவகாரத்தில் லயோலா கல்லூரி நிர்வாகம் வருத்தம் கோரியது. சர்சைக்குரிய ஓவியங்கள் கண்காட்சியில் இருந்து அவற்றை நீக்கிவிட்டோம் என்று கூறிய லயோலா கல்லூரி, வீதி விருது விழாவுக்கு நாங்கள் கொடுத்த அனுமதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையிலான எந்த செயலையும் நாங்கள் ஆதரிக்கவில்லை என்றும் கூறியுள்ளது.