"ஆன்மாவினை பெற்றவர்களால் அன்பை, விசுவாசத்தை, நன்றியை உணர முடியும், அதிலும் விலங்குகள் மனிதர்களை காட்டிலும் அதனை வெளிப்படுத்தக்கூடியது," என பேச தொடங்குகிறார் கரீம் சையத். வயதிலும் அனுபவத்திலும் தேர்ந்த கரீம் சையத் (51), ஆதிநாயகி (21), என்ற யானையின் மீது கொண்ட அன்பால் ஆழ்வார்திருநகரியில் உள்ள ஆதிநாதர் கோயிலில் தங்கி வாழ்ந்து வருகிறார்.
கோவை : "ஆன்மாவினை பெற்றவர்களால் அன்பை, விசுவாசத்தை, நன்றியை உணர முடியும், அதிலும் விலங்குகள் மனிதர்களை காட்டிலும் அதனை வெளிப்படுத்தக்கூடியது," என பேச தொடங்குகிறார் கரீம் சையத். வயதிலும் அனுபவத்திலும் தேர்ந்த கரீம் சையத் (51), ஆதிநாயகி (21), என்ற யானையின் மீது கொண்ட அன்பால் ஆழ்வார்திருநகரியில் உள்ள ஆதிநாதர் கோயிலில் தங்கி வாழ்ந்து வருகிறார்.
தேக்கம்பட்டியில் நடைபெறும் யானைகள் முகாமிற்கு வந்த கரீம் பாய் தன் செல்ல யானை ஆதிநாயகியைப் பற்றி பேசுகையில், "இந்த முகாமில் மதத்தை வைத்து எந்த ஒடுக்குமுறையும் நிகழ்வதில்லை. என்னுடைய அன்பு மதத்திற்கு அப்பாற்பட்டது. நான் என்னுடைய ஆன்மாவையும், இதயத்தையும் அவளைப் பத்திரமாக பார்த்துக் கொள்வதற்காகவே அர்ப்பணித்துள்ளேன்.
நான் கடந்த 19 வருடங்களாக ஆதிநாயகிடன் இருக்கிறார்கள். அவளை என் குடும்பத்தில் ஒருத்தியாக, பந்தமாகத் தான் நினைக்கிறேன். என்னுடைய மதம் ஒருபோதும் அவளுக்கு பணிவிடை புரியத் தடையாக இருந்ததில்லை," என்றார். ஆதிநாயகியை பற்றியே பேசிக் கொண்டிருந்த கரீமிடம் அவரை பற்றி கேட்கும் போது இன்னும் சில ஆச்சர்ய தகவல்கள் கிடைத்தன.

தூத்துக்குடியைச் சேர்ந்த கரீமின் குடும்பம் மூன்று தலைமுறைகளாக திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் யானைபாகன் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவருடைய தாத்தாவும், இன்னும் சில உறவினர்களும் கூட சொந்தமாக யானைகளை வைத்து வளர்த்து வருகிறார்கள். மேலும், கரீமின் மகன் அப்பாஸ் (23), ஏ.சி மெக்கானிக் தொழில் செய்து வந்தாலும், பகுதி நேரமாக குமுதவல்லி என்ற கோவில் யானையையும் கவனித்து வருகிறார்.
இத்தனை வருடங்களாகியும் கரீமுக்கு ஆதிநாயகி மீது தனிபிரியம். அவள் மீது வேறு யாரும் பிரியமாயிருப்பதை கூட அவரால் பொறுத்துக் கொள்ள முடியாது. எனவே, அவளிடம் யாரையும் அவர் நெருங்கவிடுவதில்லை. ஆதிநாயகிக்கு சின்ன காய்ச்சல், தும்மல் வந்தால் கூட அதனை நொடி பொழுதில் அவரால் புரிந்து கொள்ள முடியும். அந்த அளவுக்கு இருவருக்குள்ளும் இருக்கும் பந்தம் அன்பால் நிறைந்திருக்கிறது.

தற்போது யானைகள் புத்துணர்வு முகாமில் ஆதிநாயகி உடன் கரீம் சேட்டும் அவரது மகன் அப்பாஸும் உள்ளனர். யானைகள் உடல்ரீதியாகச் சந்திக்கும் அனைத்து பிரச்சினைகளும் கரீம் சேட்டுக்கு அத்துப்படி. இடையில், ஆதிநாயகிதியை டி.பி நோய் தாக்கியது. அப்போதும், கரீம் உரிய மருத்துகள் கொடுத்து குணமாக்கியதை அப்பாஸ் பகிர்ந்து கொள்கிறார்.
"வெறும் மருந்துகளால் ஆதிநாயகி குணமாகவில்லை. என் அப்பாவின் அன்பும், நெருக்கமும் தான் அவளை குணப்படுத்தியது. நோயின் தொடக்கத்தில் டாக்டர்.கே.சி.பணிக்கர் சிகிச்சை அளித்தார். அவரால் வெறுமனே மருந்துகளை மட்டும் தான் கொடுக்க முடிந்தது. அது ஆதிநாயகியின் உடல்நிலையைக் கொஞ்சமும் மாற்றிவிட வில்லை.
அதன் பிறகு யானையைப் பராமரித்தவர்கள் பற்றி கேட்டு அப்பாவை பரிந்துரைத்தார். அதன் பிறகு முழுநேரமும் அப்பா, ஆதிநாயகியுடன் இருந்து நன்றாக கவனித்துக் கொண்டார். அவர்கள் இருவரும் பிரிக்கமுடியாத அளவுக்கு பந்தமானவர்கள்," என்றார் கரீமின் மகன் அப்பாஸ்.
அவரைத் தொடர்ந்து கரீம் பேசுகையில், "நான் 5 -ம் வகுப்புக்கு மேல் படிக்கவில்லை. என்னுடைய வீட்டில் 5 யானைகள் இருந்தது. என்னுடைய ஆர்வமும், அவை மீதிருந்த அன்பும் என்னை அவற்றுடன் இணைத்து வைத்திருந்தது. நான் யானைகளைத் திருமண நிகழ்ச்சிகளுக்கு, கோவில்களுக்கும் அழைத்துச் செல்லுவேன். என்னுடைய சிறுவயது பருவம் முழுவதும் யானைகளுடனே கழிந்தது.
யானைகளுடன் பழகப் பழக அவற்றின் குணாதிசியங்களை புரிந்து கொண்டேன். இதனால் அவற்றை கட்டுப்படுத்துவது எனக்கு வசமாகியது," என்றார். மேலும், திருச்செந்தூர், ஶ்ரீவில்லிபுத்தூர், மதுரை உள்ளிட்ட பல இந்து கோவில்களில் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த பாகன்கள் பணி புரிகின்றனர் என சுட்டி காட்டினார் கரீம்.
யானைகளுக்கு மட்டுமில்லாமல் பகன்களுக்கும் இளைப்பாறுதலாக இருக்கும் இந்த முகாமில், "எல்லா மதத்திலும் அன்பு இருக்கிறது, அன்பிற்கு மதம் இல்லை" என கரீம், ஆதிநாயகி யானையின் பந்தம் நிரூபித்துள்ளது கூடுதல் மகிழ்ச்சியான விசயம் ஆகும்.