கோவை : கோவில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் யானைகள் பவானியாற்றுப்படுகையில் படுத்தபடி மணிக்கணக்கில் ஆனந்தமாய் குளித்து மகிழ்கின்றன.
கோவை : கோவில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் யானைகள் பவானியாற்றுப்படுகையில் படுத்தபடி மணிக்கணக்கில் ஆனந்தமாய் குளித்து மகிழ்கின்றன.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பவானி நதியின் கரையோரப் பகுதியான தேக்கம்பட்டி என்னுமிடத்தில் கோவில் யானைகளுக்கான புத்துணர்வு நலவாழ்வு முகாம் கடந்த 14 -ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. வரும் ஜனவரி 30 -ம் தேதி வரை நடைபெறும் இம்முகாமில் பங்கேற்றுள்ள யானைகளுக்குச் சத்தான சரிவிகித உணவு, பழ வகைகள், ஆரோக்கியத்திற்கான நடைப்பயிற்சி என பல்வேறு வகைகளில் யானைகளின் நலன்காக்கும் விஷயங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனாலும், யானைப்பாகன்கள் கூறும் போது முகாமின் சிறப்பே அவற்றின் குளியல் தான் என்கின்றனர். வனவிலங்கான யானைகள் ஒரு கூட்டமாக காடுகளில் சுற்றித்திரியும் போது வனத்தின் ஊடே செல்லும் ஆறுகள் மற்றும் நீரோடைகளில் தாகம் தீர்த்தபின் குளிப்பது வழக்கம். வியர்வைச் சுரபி இல்லாத யானைகள் தங்களில் உடல் உஷ்ணத்தை நீரில் மூழ்கியே தணித்துக்கொள்ளும். உடல் முழுவதும் நனையும்படி நீண்ட நேரம் குளிக்கும் தன்மை கொண்டவை.
ஆனால், இவை வனத்தை விட்டுப் பிரிந்து கோவில்களில் வளர்க்கப்பட்டு வருவதால் அதன் இயற்கையான குளியலுக்கு மாறாக கோவில்களில் உள்ள கிணற்று நீரைக்கொண்டே தினசரி குளிக்க வைக்கப்படுகின்றன. இதனால் ஆண்டுக்கொருமுறை மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானி ஆற்றங்கரையோரம் நடைபெறும் நலவாழ்வு முகாமில் பங்கேற்கும் கோவில் யானைகளுக்கு அதன் இயல்பான குளியல் போட வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது.
தற்போது முகாமில் பங்கேற்றுள்ள 28 யானைகளும் தினசரி ஆற்றின் கரையோரம் அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு அழைத்து வரப்பட்டு குளிக்க வைக்கப்படுகின்றன. சில அடி தொலைவில் உள்ள மின்மோட்டார்கள் ஆற்று நீரை உறிஞ்சி நீண்ட குழாய்கள் மூலம் யானைகள் மீது தண்ணீர் பீய்ச்சியடிக்கிறது. அதன்பின் யானைகளை ஆற்றின் படுகையில் படுக்கவைத்து நீர் ஊற்றி நன்கு தேய்த்து குளிப்பாட்டுகின்றனர்.

இதற்கிடையில், யானைகள் உடல் வெப்பத்தைக் குறைக்க அடிக்கடி மண்ணை வாரிப் போட்டுக்கொள்வதால் யானைகளை பிரஷ்களை கொண்டு தேய்த்து குளிக்க வைக்கின்றனர். அதன் பின்னர் அங்கேயே அமைக்கப்பட்டுள்ள யானைகளுக்கென்று பிரத்தேயமாக அமைக்கப்பட்டுள்ள ஷவர்பாத்தின் கீழே நிற்கவைத்துப் பல முனைகளில் இருந்தும் மேலிருந்து கீழாக யானைகளின் உடலில் தண்ணீர் விழும்படி செய்கின்றனர்.
இதுகுறித்து பாகன்கள் கூறுகையில், "இப்படி மணிக்கணக்கில் தண்ணீரில் ஊறித் திளைப்பதால் யானைகள் பெருமகிழ்ச்சியடைகிறது. மேலும், மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் இருந்து ஓடிவரும் தூய்மையான ஆற்று நீரில் யானைகள் குளிப்பதால் அவற்றின் ஆரோக்கியமும் மேம்படுகிறது," என்கிறார்கள்
மேலும், கடந்த 2012 -ம் ஆண்டு முதல் 2015 -ம் ஆண்டு வரை யானைகள் அனைத்தும் ஆற்றில் இறக்கப்பட்டே குளிக்க அனுமதிக்கப்பட்டன. ஆனால், ஆற்றின் வேகம் அதிகரிப்பு, ஆற்றில் குளிக்க இறங்கும் யானைகள் பாகன்களின் கட்டுப்பாட்டையும் மீறி உற்சாக மிகுதியில் ஆற்றை விட்டு வெளியேற மறுப்பது உள்ளிட்ட காரணங்களினால் கடந்த 4 ஆண்டுகளாக ஆற்றுப்படுகையிலேயே குளியல் தளங்கள் அமைக்கப்பட்டு யானைகள் குளிக்க வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.