கோவை : கோவையில் சுற்றுச்சுழல் துறை சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பயன்படுத்திய சில்வர் தட்டு, டம்ளர்களை சரியாக சுத்தம் செய்யாமல் பங்கேற்பாளர்களுக்கு வழங்கியதாகத் தன்னார்வ அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
கோவை : கோவையில் சுற்றுச்சுழல் துறை சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பயன்படுத்திய சில்வர் தட்டு, டம்ளர்களை சரியாக சுத்தம் செய்யாமல் பங்கேற்பாளர்களுக்கு வழங்கியதாகத் தன்னார்வ அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
கோவை மாநகராட்சி கலையரங்கில் பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தவர்களுக்கு அரங்கத்தின் வெளியே தனியார் ஹோட்டலில் இருந்து கொண்டு வரப்பட்ட சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து, சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் ஒருவருக்கு கொடுக்கப்பட்ட சில்வர் தட்டு, டம்ளர்களை சரியாக கழுவாமல் மற்றவருக்கு கொடுத்துள்ளனர். இதற்கிடையில், தட்டுகளை வெறும் துணியால் துடைத்தும், டம்ளரை பயன்படுத்திய தண்ணீரிலேயே திரும்பவும் கழுவி மற்றவர்களுக்கு வழங்கியுள்ளனர். இதை கவனித்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தனியார் ஓட்டல் நிர்வாகத்தின் இச்செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் நிகழ்ச்சி அரங்கத்தின் வெளியே பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

மேலும், பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும் என்று நடத்தப்பட்ட கூட்டத்தில், அதற்கு மாற்றாக சில்வர் தட்டு, டம்ளர் போன்றவற்றை முன் வைத்தது வரவேற்கத்தக்கது. ஆனால், நிகழ்ச்சிக்கு வந்திருப்பவர்களுக்குச் சரியாக கழுவாமல் வழங்குவது சுகாதாரமானது அல்ல என ஆர்வலர்கள் தெரிவித்தனர். இதற்கு மாநகராட்சி நிர்வாகமும், சம்பந்தப்பட்ட துறையினரும் அந்த தனியார் ஓட்டல் நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிகழ்ச்சிக்கு வந்திருந்த தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.