கோவை : தி.மு.க. கட்சிக்கு மாறிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அ.தி.மு.க மூழ்கும் கப்பல் என விமர்சித்தற்கு அ.தி.மு.க புரட்சி போர்கப்பல் என பதிலடி கொடுத்து கோவையில் தமிழக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டியளித்தார்.
கோவை : தி.மு.க. கட்சிக்கு மாறிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அ.தி.மு.க மூழ்கும் கப்பல் என விமர்சித்தற்கு அ.தி.மு.க புரட்சி போர்கப்பல் என பதிலடி கொடுத்து கோவையில் தமிழக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டியளித்தார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு விழிப்புணர்வு பேரணியை இன்று நடைபெற்றது. அதில் நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் ஆகியோர் இந்தப் பேரணியினை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அவர் அளித்த பேட்டியில், "கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதியில் தமிழக அரசு நிவாரண பணிகளை சிறப்பாக செயலாற்றி கொண்டு இருக்கின்றது. மேலும், பாதிப்பு ஏற்பட்ட 11 மாவட்டங்களில் நிவாரணப்பணிகள் விரைவாக நிறைவடையும். கஜா புயல் பாதிப்புக்கு மத்திய அரசு இதுவரை நிவாரணம் வழங்கவில்லை. இது குறித்து தமிழக முதல்வர் நேரடியாக வலியுறுத்தியும் மத்திய அரசு நிதி வழங்கவில்லை," என தெரிவித்தார்.
"இதுவரை தமிழக அரசு ரூ.1200 கோடி அளவில் நிவாரண பணிகளை மேற்கொண்டுள்ளது. எனவே, தமிழக அரசிடம் இருந்து அறிக்கை வரவில்லை என மத்திய அரசு சொல்வது சரியான காரணமில்லை. முதலில் உத்தேசமாக நிவாரண தொகையை வழங்கிவிட்டுக் கூட அறிக்கையைப் பெறலாம்," என தெரிவித்தார்.
இதற்கிடையில் செய்தியாளர்கள், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தி.மு.க.விற்கு மாறியதைக் குறித்து கருத்து கேட்கையில், " அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.விற்கு சென்றவர்கள் யாரும் அரசியலில் சரியான இடத்தை அடையவில்லை. அ.தி.மு.க எப்போதும் நிலைத்த தன்மையுடன் நீடித்து நிற்கும். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தி.மு.க.விற்கு சென்றதால் கடுகளவு பாதிப்பு கூட அதிமுகவிற்கு கிடையாது. இதற்கு முன்னால் ஈரோடு முத்துச்சாமி அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.விற்கு சென்ற பின்னர் அவர் அரசியலில் வளர்ச்சி அடையவில்லை.
அ.தி.மு.க.வில் முத்துச்சாமி இருந்து இருந்தால் இந்நேரம் பெரிய வளர்ச்சி அடைந்து இருப்பார். ஈரோடு முத்துச்சாமி சென்ற போதே பின்னடைவு ஏற்படாத அ.தி.மு.க.வில் செந்தில் பாலாஜி சென்றதாலா பாதிப்பு ஏற்பட போகின்றது. செந்தில்பாலாஜி தி.மு.க.விற்கு சென்று இருப்பதால் கொங்கு மண்டல அ.தி.மு.க.விற்கு எவ்வித பின்னடைவும் ஏற்படாது," என பதிலளித்தார்.
இதனைத் தொடர்ந்து, 'அ.தி.மு.க மூழ்கும் கப்பல்' என செந்தில் பாலாஜி விமர்சித்து இருப்பது குறித்த கேள்விக்கு, 'அ.தி.மு.க மூழ்கும் கப்பல் அல்ல, புரட்சி போர்கப்பல்' என பதிலளித்தார்.
மேலும், கோவை மாவட்ட அதிமுகவில் எந்த சலசலப்பும் இல்லை என தெரிவித்த பொள்ளாச்சி ஜெயராமன் கோவை வடக்கு எம்.எல்.ஏ அருண்குமாருக்கு சமீபகாலமாக உடல்நிலை சரியில்லாததால் கட்சி, அரசு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கவில்லை என தெரிவித்தார்.