கோவை : கோவையில் பிளாஸ்டிக் இல்லா தமிழகம் விழிப்புணர்வு பேரணியை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடக்கி வைத்தனர்.
கோவை : கோவையில் பிளாஸ்டிக் இல்லா தமிழகம் விழிப்புணர்வு பேரணியை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடக்கி வைத்தனர்.

கடந்த மே மாதம் 29 -ம் தேதி தமிழக சட்டசபையில் துறை ரீதியான மானிய கோரிக்கையின் போது 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், "ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மக்காத நிலை காரணமாக நீர்நிலை ஆதாரங்கள், நிலத்தடி நீர்மட்ட பாதிப்பு, அதன் கழிவுகளில் மழை நீர் தேங்கும் அவலம் போன்றவை நிகழ்கிறது.

மேலும், கொசுக்கள் உற்பத்தி ஆகி டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் வகையறா நோய்கள் பரவுவதாலும், பிற உணவுகளுடன் கால்நடைகள் பிளாஸ்டிக்கை உண்பதால் வன விலங்கு மற்றும் கால்நடைகள் உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே, இவை வரும் ஆண்டு ஜனவரி முதல் தடை செய்யப்படும்," எனக் குறிப்பிட்டிருந்தார். இதனையொட்டி, இன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

அந்தப் பேரணியை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தொடக்கி வைத்தனர். துணி வணிகர் சங்க பள்ளி, சி.எஸ்.ஐ மேல்நிலைப் பள்ளி, தேவாங்கு மேல்நிலைப் பள்ளி, வி.சி.வி சிசு வித்யாலயா பள்ளிகளைச் சேர்ந்த 300 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் இதில் கலந்து கொண்டனர்.

மேலும், அந்த பேரணியில் மாணவர்கள் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீங்குகள் குறித்து விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் ஊர்வலமாகச் சென்றனர். இந்த பேரணியானது வ.ஊ.சி மைதானத்தில் முடிவடைந்தது.

இதன் தொடக்க நிகழ்வில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், காவல்துறை ஆணையர் சுமித் சரண்,போக்குவரத்து துணை ஆணையர் சுஜித்குமார், சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் பாலாஜி சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.