கோவை : வடகோவை அருகே உள்ள சாஸ்திரி சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் சாக்கடை வடிகால் பணிகள் நடைபெறுவதால் வடகோவை சாலை மற்றும் மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வாகன ஒட்டிகள் அவதியடைந்தனர்.
கோவை : வடகோவை அருகே உள்ள சாஸ்திரி சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் சாக்கடை வடிகால் பணிகள் நடைபெறுவதால் வடகோவை சாலை மற்றும் மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வாகன ஒட்டிகள் அவதியடைந்தனர்.

கோவை மாநகராட்சியால், சாஸ்திரி சாலையில் உள்ள ரயில்வே சுரங்கபாலம் பகுதி மற்றும் சாலை அருகே உள்ள பகுதிகளில் சாக்கடை வடிகால் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அச்சாலை அடைக்கப்பட்டுள்ளது. அச்சாலை வழியாக ராம் நகர், மேட்டுப்பாளையம் சாலை, புருக்பாண்ட் சாலை ஆகிய பகுதிகளுக்கு வாகன ஒட்டிகள் சென்று வந்தனர்.

கடந்த ஒரு வாரம் காலமாக அச்சாலை அடைக்கப்பட்டுள்ளதால் மாற்றுப் பாதையும் முறையாக இல்லாததால் வடகோவை சுற்றியும், வடகோவை மேம்பாலம் வழியாகவும் வாகன ஒட்டிகள் செல்லும் சூழல் நிலவி வருகிறது. இதனால் புருக்பாண்ட் சாலை வழியாகச் செல்வோர் அவினாசி மேம்பாலம் கீழ் பகுதி வழியாகச் செல்கின்றனர்.

இதன் காரணமாக இவ்விரு மேம்பாலங்களிலும், வடகோவை மற்றும் மேட்டுப்பாளையம் சாலையிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஒட்டிகள் சிரமமடைந்து வருகின்றனர். இது போலவே, மாநகராட்சி பணிகள் நடைபெறும் போது மாற்றுப் பாதை முறையாக அமைக்கப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் தெரிவித்தனர்.

மாநகராட்சி ஊழியர் ஒருவர் கூறும் போது இந்தப் பணிகள் இன்னும் 20 நாட்கள் நடைபெற உள்ளது என்றார்.