கோவை : குடும்பப் பிரச்சனை காரணமாக கோவை ரத்தினபுரி அருகே கைக்குழந்தையுடன் கர்ப்பிணி பெண் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : குடும்பப் பிரச்சனை காரணமாக கோவை ரத்தினபுரி அருகே கைக்குழந்தையுடன் கர்ப்பிணி பெண் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் வசித்து வரும் மகேஸ்வரி கடந்த 2015-ம் ஆண்டு சின்ன தடாகம் பகுதியைச் சேர்ந்த தனபால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. மேலும், தற்போது நிறை மாத கர்ப்பிணியாகவும் அவர் இருந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஆறு மாதமாக கணவன், மனைவி இடையே குடும்பப் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக, கோவை புலியகுளம் காவல்நிலையத்தில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, காவல்துறையினரின் சார்பில் நடத்தப்பட்ட கவுன்சிலிங்கையடுத்து, இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். பின்னர், அவர்களுக்கு இடையே மீண்டும் பிரச்சனை ஏற்பட்டதால், மகேஸ்வரி தனது பெற்றோர் வீட்டில் குழந்தையுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், அவர் இன்று மதியம் பெங்களூர் முதல் எர்ணாகுளம் வரை செல்லும் ரயில் முன் கைக்குழந்தையுடன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில் சம்பவ இடத்திலேயே இருவரது உடலும் துண்டாகியது. மேலும், உயிரிழந்த மகேஸ்வரியின் வயிற்றில் இருந்த குழந்தையும் பனிக்குடம் உடைந்து தண்டவாளத்தில் உயிரற்று கிடந்தது.
இன்னும் பிரசவம் ஆக 10 நாளே இருந்த நிலையில், குடும்ப பிரச்சனை காரணமாக கைக்குழந்தை மற்றும் ஆண் சிசுவுடன் கர்ப்பிணி பெண் தண்டவாளத்தில் உருக்குலைந்து கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, ரத்தினபுரி போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.