கோவை : கோவையில் அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் தகுதிக்கேற்ற பதவி மற்றும் ஊதிய உயர்வு வழங்கிட தமிழக அரசை வலியுறுத்தித் தொடர் போராட்டத்தின் முன்னோட்டமாகப் புற நோயாளிகள் சிகிச்சை புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
கோவை : கோவையில் அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் தகுதிக்கேற்ற பதவி மற்றும் ஊதிய உயர்வு வழங்கிட தமிழக அரசை வலியுறுத்தித் தொடர் போராட்டத்தின் முன்னோட்டமாகப் புற நோயாளிகள் சிகிச்சை புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
அரசு மருத்துவர்கள், தகுதியின் அடிப்படையில் காலமுறையிலான ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்கிடக்கோரி பல வருடங்களாகப் போராடி வருகின்றனர். மற்ற மாநிலங்கள் மற்றும் மத்திய அரசை ஒப்பிடுகையில், தமிழக அரசு மருத்துவர்களுக்குக் குறைவான ஊதியம் மற்றும் பணப்படி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, தமிழக அரசைக் கண்டித்து இன்று ஒரு நாள் புறநோயாளிகள் சிகிச்சை புறக்கணிப்பில் மருத்துவர்கள் ஈடுபட்டனர்.

ஊதியம் உயர்த்தித் தரப்படும் என தமிழக அரசு வாக்குறுதி கொடுத்து ஒராண்டாகியும் இதுவரை செயல்படுத்தவில்லை. எனவே, அரசு மருத்துவர் கூட்டமைப்பு சார்பில் இதே கோரிக்கைளை மீண்டும் வலியுறுத்தி, நோயாளிகள் பாதிக்கப்படாமல் ஒத்துழையாமை போராட்டத்தை, கடந்த இருபது நாட்களாக நடத்தி வருகின்றனர். ஆனாலும், அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, இன்று அரசின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் புற நோயாளிகள் புறக்கணிப்பில் தமிழகம் முழுவதும் 18,688 அரசு மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கும் அரசு செவி சாய்க்கவில்லை என்றால் , வரும் 8- ம் தேதி திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்யாமல் புறக்கணிக்க உள்ளதாகத் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து இம்மாத இறுதியில் 27- ம் தேதி முதல் 29- ம் தேதி வரை மூன்று நாட்கள் தமிழக அரசை கண்டித்து தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவிசங்கர் தெரிவித்தார்.