கோவை : தமிழகத்திற்கு பிரதமர் வந்தால் கறுப்புக்கொடி காட்டுவோம் என்ற வைகோவின் சவாலை ஏற்பதாகவும், எந்த விதத்தில் எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டாலும் எதிர்கொண்டு தமிழகத்திற்கு பிரதமர் நிச்சயம் வருவார் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.
கோவை : தமிழகத்திற்கு பிரதமர் வந்தால் கறுப்புக்கொடி காட்டுவோம் என்ற வைகோவின் சவாலை ஏற்பதாகவும், எந்த விதத்தில் எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டாலும் எதிர்கொண்டு தமிழகத்திற்கு பிரதமர் நிச்சயம் வருவார் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:- முன்னர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திமுகவில் தனக்கு எதிராக நடந்த மிகப்பெரிய சதிச்செயலை கண்டித்து, வெளியேறி, அதற்குக் காரணமானவர்களை பழிவாங்குவேன் என சபதம் எடுத்தார்.
ஆனால், தனது நிலைப்பாட்டில் இருந்து மாறி எந்த தீய சக்திக்கு எதிராகப் போராடுவேன் என சொன்னாரோ, அந்தத் தீய சக்திகளுக்கு ஊக்கமும் நம்பிக்கையும் அளிக்கும் வகையில் நடந்து வருகிறார். இது அவருடைய நம்பகதன்மையை தமிழக மக்களிடம் கேள்விக்குறியாக்கி கொண்டிருக்கிறது. அதே, மதிமுக பொது செயலாளர் வைகோ தற்போது தமிழகத்திற்கு பிரதமர் வந்தால் கருப்புக்கொடி காட்டுவோம் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார்.
இந்த வார்த்தைகளை சிலரை திருப்தி செய்யவும், அரசியல் ரீதியான ஆதாயம் தேடுவதற்கும் அவர் பயன்படுத்திய போதிலும், வைகோவின் சவாலை நான் ஏற்றுக்கொள்கிறேன். தமிழகத்திற்கு பிரதமர் மோடி நிச்சயம் வருவார். எந்த விதத்தில் எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டாலும், அதனை ஏற்க தயாராக உள்ளோம். ஒருவரைத் திருப்தி செய்ய மற்றொருவரை அவமதித்து நடக்கவேண்டுமென்றால் அதற்குத் தமிழகத்தில் வழியில்லை.
திமுகவுடன் இணைந்திருக்க வேண்டும், கூட்டணியில் இருக்க வேண்டும் என வைகோ நினைக்கிறார். ஆனால், திமுகவினர் மதிமுகவை ஏளனமாகப் பார்க்கின்றனர். வேண்டா விருந்தாளியாக மதிமுக, திமுக கூட்டணியில் இருந்து வருகிறது. யாரை முதல்வராக்க வேண்டும் என நினைக்கின்றனரோ அவர்களை திருப்திப்படுத்தவே மதிமுக பொது செயலாளர் வைகோ இப்படி அவதூறு பேசி வருகிறார். " என்று வைகோவின் சவால், அதன் பின்னிருக்கும் அரசியல் பிணக்குகள் ஆகியவற்றிற்கு விளக்கம் கொடுத்தார்.
மேலும் பேசிய அவர், " கஜா புயல் பாதிப்பு தொடர்பாக மத்திய ஆய்வுக் குழுவின் முழு அறிக்கை வந்தவுடன் கூடுதல் நிதி ஒதுக்குவது குறித்துப் பேசப்படும். மேகதாதுவில் அணை கட்ட ஆய்வறிக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாதிப்பு ஏற்படும் வகையில் அந்த ஆய்வறிக்கை அமையாது என நம்புகிறேன். மேகதாது அணைக்குப் பா.ஜ.க முழு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்," என்றார்.