கோவை : சாலைகளை ஆளும் தனியார் பேருந்துகளின் அசுர வேகத்தை குறைக்கும் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள், முறையாகப் பொருத்தப்படுகிறதா..? அல்லது பொருத்தப்பட்ட கருவிகள் பணிபுரிகிறதா..? என்பதை ஆய்வு செய்யாத வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களால், பொதுமக்கள் சாலையின் பக்கமே வர அஞ்சுகின்றனர்.
கோவை : சாலைகளை ஆளும் தனியார் பேருந்துகளின் அசுர வேகத்தை குறைக்கும் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள், முறையாகப் பொருத்தப்படுகிறதா..? அல்லது பொருத்தப்பட்ட கருவிகள் பணிபுரிகிறதா..? என்பதை ஆய்வு செய்யாத வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களால், பொதுமக்கள் சாலையின் பக்கமே வர அஞ்சுகின்றனர்.
நம் நாட்டில் ஆண்டுதோறும் சாலை விபத்துகளால் சராசரியாக ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் இறக்கின்றனர். இந்த மரண எண்ணிக்கைகள் ஆண்டுக்காண்டு அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. இதற்கு முக்கிய காரணம் அதிவேகமாக வாகனத்தை ஓட்டுவது. ஆகவே, இதைக் கட்டுப்படுத்த அரசு வேகக்கட்டுப்பாட்டுக் கருவிகளை கட்டாயமாக்கியுள்ளது.
ஆனால், கோவை மாநகரில் உள்ள பல பேருந்துகளில் வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் இருக்கின்றனவா..? என சந்தேகப்படும் அளவிற்கு உள்ளது. இதற்கு காரணம் தனியார் பேருந்துகள் அதிவேகமாக வாகனத்தை ஓட்டி தொடர்ந்து விபத்துக்களை ஏற்படுத்தி வருவது. இதைக் கட்டுப்படுத்த வேண்டிய வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் தனியார் பேருந்துகளை கண்டுகொள்வதே கிடையாது. இந்த அலட்சியங்களால் பல விபத்துக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதேபோல, பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது.
கோவை மாவட்டத்திலுள்ள திருச்சி சாலை, அவினாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, பொள்ளாச்சி சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் தனியார் பேருந்துகள் அதிவேகமாக வாகனத்தை இயக்கி விபத்துக்களை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த விபத்துகளைக் கட்டுப்படுத்த, தனியார் பேருந்துகளின் அட்டகாசங்களை தடுக்க போக்குவரத்து காவல்துறையினரும், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களும் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இந்த தனியார் பேருந்துகள் ஒன்றைவிட ஒன்று அதிவேகமாக சென்று பயணிகளை ஏற்றிக்கொண்டு, பணம் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றனர். ஆனால், இப்படி பணத்திற்காக அதிவேகமாக வாகனத்தை இயக்கி செல்வதால் பல விபத்துக்கள் நேரிடுவதை இவர்கள் கண்டு கொள்வதில்லை. இவ்வாறு அதிவேகமாக வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்தும் பேருந்துகளை பொதுமக்கள் யாராவது மடக்கி, பிடித்து தட்டி கேட்டாலும் அவர்கள் தங்கள் முதலாளியின் அரசியல் பலத்தை பயன்படுத்துகின்றனர்.
இதனால், தாறுமாறாகப் பேருந்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தும் தனியார் பேருந்து ஓட்டுனர்கள் தப்பித்துக் கொள்கின்றனர். இதை மீறி பொதுமக்கள் யாராவது தட்டி கேட்டால், அவர்களிடம் நாங்கள் ஃபைன் கட்டி சென்று விடுவோம். உங்கள் வேலையைப் பார்த்து செல்லுங்கள் எனவும் அச்சுறுத்துகின்றனர். இப்படி தனியார் பேருந்துகளின் அட்டகாசங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
அதேபோல, நேற்று TN 39 AX 9190 என்ற எண் கொண்ட கே.எம்.எஸ்., 30A, உக்கடம் - சூலூர் செல்லும் பேருந்தானது, கோவை அரசு மருத்துவமனையில் இருந்து சுங்கம் நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது, TN 42 E 2622 என்ற எண் கொண்ட ராஜலட்சுமி என்ற தனியார் பேருந்தும் போட்டி போட்டுக் கொண்டு வந்து கொண்டிருந்தது. இரண்டு பேருந்தும், ரெயின்போ ஸ்டாப் அருகே எந்த வாகனத்திற்கும் வழிவிடாமல் சாலையை அடைத்து அதிவேகமாக சென்று கொண்டிருந்தபோது, திடீரென இரண்டு பேருந்துகளும் உராய்சி, கண்ணாடிகள் சிதறி விபத்து ஏற்பட்டது. இதில், பேருந்துக்குள் பயணம் செய்த பயணிகள் சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.

பின்னர், இந்த இரண்டு பேருந்துகளும் சாலையை மறித்து நடுவழியில் பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதைக்கண்ட பொதுமக்களில் ஒருவர் பேருந்து ஓட்டுனர்களின் அட்டகாசத்தை தட்டிக் கேட்ட பொழுது, அவரை தங்களது அதிகார தொனியில் பேசி மிரட்டினர். இப்படி இரண்டு பேருந்துகளும் போட்டி போட்டு பேருந்துகளை ஓட்டி விபத்தை ஏற்படுத்துகின்றனர். இந்த விபத்தில் பயணிகளும் சாலையில் சென்ற பொதுமக்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதுகுறித்து பேருந்தில் பயணித்த சுமதி கூறியதாவது :- கே.எம்.எஸ். பேருந்தும், ராஜலட்சுமி பேருந்தும் அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் இருந்து போட்டி போட்டுக்கொண்டு பேருந்து ஓட்டி வந்தனர். அப்போது, பேருந்துகளுக்குள் இருந்த நாங்கள் எல்லோரும் பயந்து கிடந்தோம். நாங்கள் பேருந்தை மெதுவாக ஓட்டும்படி கூச்சலிட்டோம்.
ஆனால் நாங்கள் வந்த ராஜலட்சுமி பேருந்து ஓட்டுநர், அதையெல்லாம் காதில் வாங்காமல் ரொம்ப வேகமாக ஓட்டி வந்தார்கள். அதுக்கு அப்புறம் இரண்டு பேருந்தும், ரெயின்போ பேருந்து நிறுத்தம் கடந்து ஓரத்தில் இடித்துக் கொண்டார்கள். நல்லவேளை, எங்கள் மேல் லேசான அடிகள் மட்டும்தான் பட்டுச்சு. ஒருசிலருக்கு கண்ணாடி சிதறியதில் காயம் ஏற்பட்டு, மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
அதேபோல, இரண்டு பேருந்துகாரர்களும் எந்த வண்டிக்கும் வழிவிடாமல் யாருக்கும் பயப்படாமல் சாலையில் பேருந்தை நிறுத்தி விட்டு வாக்குவாதம் பண்ணிட்டு இருந்தார்கள். இந்த பேருந்துகாரர்கள் பணம் சம்பாதிக்க எங்கள் உயிர் தான் பலியா..?. இவர்கள் எல்லோரும் சும்மா விடக்கூடாது. போலீஸார் இவர்கள் சிறையில் போடவேண்டும் என ஆதங்கத்தில் பேசினார்.

அதேபோல, கோவை அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் தனியார் பேருந்துகள், கூட்டங்கள் ஏறும்வரை பேருந்தை நிறுத்தத்தில் இருந்து எடுப்பது கிடையாது. பின்னர், மற்ற பேருந்துகள் வரும்பொழுது போட்டி போட்டுக்கொண்டு திருச்சி சாலையை நோக்கி வேகமாக ஓட்டிச் செல்கின்றனர்.
இவர்கள் இடையில் உள்ள இரண்டு பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல், சுங்கம் நிறுத்தத்தை இலக்காகக் கொண்டு அதிவேகமாக வாகனத்தை இயக்குகின்றனர். இப்படி இயக்கும் பொழுது வழக்கமாகவே, அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து ஆட்டோ ஓட்டுனர் ஜாகிர் உசேன் கூறியதாவது :- நான் திருச்சி சாலையில் உள்ள அரசு மருத்துவமனையில் இருந்து சுங்கம் நோக்கி செல்லும் போது, 2 தனியார் பேருந்துகளும் போட்டி போட்டு விபத்து ஏற்படுத்தி சாலையை மறித்து சண்டை போட்டுவிட்டு இருந்தார்கள். அப்புறம் நான் என்ன ஆனதென்று வந்து பார்க்கும் போது, ஒரு வயதான அம்மா, பேருந்தில் இருந்து காயத்துடன், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இவ்வாறு, இந்த ரெயின்போ நிறுத்தம் அருகில், அதிவேகமாக போட்டி போட்டு வரும் தனியார் பேருந்துகளால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இவர்களுக்குள் இருக்கும் போட்டியில், யாராவது மாட்டிக் கொண்டால், கண்டிப்பாக உயிரிழப்பு நிச்சயம். இப்படி, அடாவடித்தனமாக வாகனத்தை இயக்கும் தனியார் பேருந்துகளை யாராவது தட்டி கேட்டால் அடிதடிகள் வரை போகிறது.
மேலும், பேருந்து, லாரி, வேன் போன்ற வாகனங்களில் ‘கட்டாயம் வேகக் கட்டுப்பாட்டு கருவியை பொருத்தும் சட்டம்’ கடந்த 2016-ம் ஆண்டில் அமலானது. இதில், வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தாவிட்டால், அவற்றை இயக்குவதற்கான எப்.சி (தகுதி சான்று) வழங்கப்படாது என தெரிவித்துள்ளனர். இதனால், குறிப்பிடப்பட்ட வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவிகளைப் பொருத்தினர். ஆனால், பொருத்தப்பட்ட வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள் இன்றளவும் இயங்குகின்றதா..? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இது குறித்து ரெயின்போ பகுதியைச் சேர்ந்த கார்த்தி கூறும்போது :- "திருச்சி சாலையில் தனியார் பேருந்துகளால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இவர்கள் இப்படியே அதிவேகமாக ஓட்டிக் கொண்டு இருந்தால், கண்டிப்பாக உயிர் பாதிப்புகள் ஏற்படும். ஆகவே, இந்த பேருந்துகளின் வேகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். எல்லா வண்டியிலும், வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டு இருக்கிறது. ஆனால், இவர்கள் ஓட்டுகின்ற வேகத்தை பார்த்தால் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்திய மாதிரி தெரிய வில்லை," என்றார்.

இதுகுறித்து தனியார் பேருந்து மேலாளர் ஒருவர் கூறும்போது :- 1970-ல் கொடுக்கப்பட்ட நேரத்தில் தான் இன்னும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து விதிகளின் நேரம்தான் இதுபோன்ற வேகத்திற்கு காரணம். உக்கடத்தில் இருந்து சூலூருக்கு 50 நிமிடம் ரன்னிங் டைம் கொடுத்துள்ளனர். அதற்குள் நாங்கள் போய் சேரவேண்டும். இதனால், தான் அதிவேகமாக வாகனத்தை ஓட்ட வேண்டியுள்ளது. இப்படி வாகனத்தை ஓட்டி உயிர் பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு யாரும் பொறுப்பில்லை, என்றார் மனித உயிர்களை பற்றி கவலையின்றி.

அதேபோல, வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தியது குறித்தும், தனியார் பேருந்துகள் அதிவேகமாக பேருந்துகளை ஓட்டி வருவது பற்றியும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உதயகுமாரிடம் நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது கண்டிப்பாக விசாரித்து நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
அதிவேகமாகப் பேருந்துகளை ஓட்டி விபத்தை ஏற்படுத்தி வரும் தனியார் பேருந்துகள் வேகமாகப் பேருந்தை ஓட்டுவதற்கு ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், விபத்தை ஏற்படுத்தி உயிர் பலிகளை ஏற்படுத்தும் பொழுது, பொதுமக்கள் மத்தியில் தனியார் பேருந்துகள் மீதும், நடவடிக்கைகள் எடுக்காத வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மீதும் அதிருப்தி தான் கிளம்புகிறது. ஆகவே, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களும், போக்குவரத்து காவல்துறையினரும் பேருந்துகளில் வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளதா..? என்பதை தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். அப்படி செய்தால்தான் விபத்துகளைத் தடுக்கமுடியும்.