கோவை : கோவை அரசு மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் மற்றும் சக்கர நாற்காலிகளில் மருந்து பொருட்களையும், கழிவுகளையும் ஏற்றிச் செல்லுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கோவை : கோவை அரசு மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் மற்றும் சக்கர நாற்காலிகளில் மருந்து பொருட்களையும், கழிவுகளையும் ஏற்றிச் செல்லுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பொதுவாகவே, பொருளாதார நிலையில் பின்தங்கி உள்ளவர்களின் நம்பிக்கையே அரசு மருத்துவமனைகள் தான். சின்ன தலைவலியில் இருந்து புற்றுநோய் வரையிலும் அவர்கள் சார்ந்திருப்பது அவற்றைத்தான். இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனைகள் அவற்றின் முக்கியத்துவத்தை மறந்து செயல்படுவதால் நோயாளிகள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.
அதில், முக்கிய குற்றச்சாட்டு அவசரகதியில் மருத்துவமனையை நாடிவரும் நோயாளிகளுக்கு ஸ்ட்ரெச்சர் மற்றும் சக்கர நாற்காலிகள், போதுமானளவு படுக்கைகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தரத் தவறுகிறது என்பதாகும். இதற்கு காரணம், கோவை அரசு மருத்துவக் கல்லூரியின் ஊழியர்கள், நோயாளிகளுக்கு அவசியமாகக் கொடுக்கப்பட வேண்டிய ஸ்ட்ரெச்சரில் நோயாளிகளுக்கு முன்பே மருத்துவ கழிவுகளை கொண்டு செல்வதாகும்.

இது மாதிரியான ஸ்ட்ரெச்சர், சக்கர நாற்காலிகள் பற்றாக்குறைகள் நோயாளிகளை, உடல் மற்றும் மனதளவில் சிரமப்பட வைக்கிறது. அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் சில சமயங்களில் அவசரக்கால சிகிச்சைக்குக் கொண்டு செல்லப்படும் நோயாளிகள் கைகளிலோ, தோளிலோ தூக்கிச் செல்லப்படும் அவலநிலையும் ஏற்படுகிறது.
திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை என 4 மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கோவை அரசு மருத்துவமனையை மருத்துவ சிகிச்சைக்காக நம்பியுள்ள நிலையில், இங்கு அடிப்படைத்தேவைகளிலே பற்றாக்குறை இருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலை குறித்து நோயாளிகள் கூறுகையில், "எங்களை அழைத்துச் செல்ல ஸ்ட்ரெச்சர் வரும் என நினைத்துக் கொண்டிருக்கும் சூழலில் சி.எம்.சி.ஹெச் வார்டு பாய்கள் சாப்பாடு கூடைகளையும், மருந்து கழிவுகளையும் , மருந்து பெட்டிகளையும் இடம்மாற்றும் வேலையில் பிசியாக இருக்கின்றனர். இதய நோய்கள், சிறுநீரக கல், டயாலிசிஸ் உள்ளிட்ட எந்தக் கொடுமையான நோய்களுக்கும் வார்டு பாயோ, நாற்காலியோ அழைத்துச் செல்ல வருவதில்லை.

சி.எம்.சி.ஹெச் ஊழியர்கள் அவர்களுடைய பணியென குப்பைகளைத் தள்ளுவதை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அதுகுறித்து கேள்வி எழுப்பினால் அலட்சியமாகப் பதிலளிக்கிறார்கள். அது எங்களுக்கு இன்னும் வேதனையளிக்கிறது." என்கிறார்கள் நோயாளிகள்
இதுகுறித்து இன்னொரு பார்வையார் கூறுகையில், "விபத்துக்குள்ளானவர்கள் கொடுத்து வைத்த அதிஷ்டசாலிகள். ஏனென்றால் அவர்கள் ஆம்புலன்ஸில் முதலுதவி பெற்று ஸ்ட்ரெச்சரில் நேரடியாகவே வார்டுக்குள் வந்துவிடுகிறார்கள்." என்றார்.
ஒருநாளைக்கு கோவை அரசு மருத்துவமனையில் 9000 வெளிநோயாளிகளும், 1300 உள்நோயாளிகளும் சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருக்கின்றனர். இங்கு சமீப காலமாக அரங்கேறும் இதுபோன்ற அலட்சிய நடவடிக்கைகளால், நோயாளிகள் கிளினிக் மற்றும் தனியார் மருத்துவமனைகளை நாடிச் செல்கின்றனர். மேலும், இதுபோன்ற மருத்துவக்கழிவுகளை ஏற்றிச்செல்லும் சக்கர நாற்காலிகள், ஸ்ட்ரெச்சர்களில் எங்களையும் ஏற்றிச் செல்லுவது முறையல்ல. இதனால் ரத்தம் வழியாகப் பரவ கூடிய நோய்கள் தாக்கும் வாய்ப்புள்ளது.
இது குறித்து சமூக செயற்பாட்டாளர், வழக்கறிஞர் சரவணன் கூறுகையில், " தரமான சுகாதார பராமரிப்பு என்பது எல்லா மனிதர்களுடைய அடிப்படை உரிமை. இதுபோன்ற மோசமான சூழ்நிலைகள் அத்தகைய அடிப்படை உரிமைகளுக்கு எதிரானவை. ஏழை மக்கள் அரசு மருத்துவமனைகளையே தரமான சுகாதாரத்திற்கு சார்ந்திருக்கின்றனர். அரசாங்கம் அரசு மருத்துவமனைகளின் விரிவாக்கத்திற்கும், சிறந்த வசதிகளை அமுல்படுத்துவதற்கும் கோடிக்கணக்கான பணம் செலவழித்தாக கூறுகிறது. ஆனால், அத்தகைய வசதிகள் யார் அணுகுமாறு இருக்கின்றன என்பது குறித்துஅரசு கண்டு கொள்வதில்லை," என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "அரசு மருத்துவமனைகளில் கழிவுப்பொருட்களை மாற்றுவதற்கு டிராலியை வாங்குவதற்கு போதிய நிதியளிக்கவில்லையா? அல்லது ஒதுக்கப்பட்டுள்ள நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா? என்றும் கேள்வி எழுப்பினார்.
அரசு மருத்துவமனையில் அலட்சியப்படுத்தப்படுவதே நோயைவிட அதிக வேதனையளிக்கிறதென கூறும் சி.எம்.சி. மருத்துவமனை நோயாளிகளின் நிலை மாற ,விரைவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.