கோவை: தமிழக காவல்துறையினரை மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும் நோக்கில் 'காவலர் நிறை வாழ்வு பயிற்சி' கோவையில் இன்று தொடங்கியது.
கோவை: தமிழக காவல்துறையினரை மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும் நோக்கில் 'காவலர் நிறை வாழ்வு பயிற்சி' கோவையில் இன்று தொடங்கியது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மேற்கு மண்டல ஐ.ஜி பெரியய்யா, டி.ஐ.ஜி. கார்த்திகேயன், காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டு, பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்தனர். இதில், கோவை மாவட்ட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் ஐ.ஜி பெரியய்யா பேசியதாவது :- "இந்தப் பயிற்சி கோவை முழுவதும் இருக்கும் 1500 போலீசாருக்கும் நடத்தப்படுகிறது. சாதாரண காவலர் முதல் கண்காணிப்பாளர் வரை இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வார்கள். மிகுந்த பணிச்சுமைக்கு இடையே பணியாற்றும் காவல்துறையினருக்கு வேலையைப் போலவே குடும்பமும் முக்கியம்.
ஒருவேளைக் குடும்பத்தில் கவனம் செலுத்த முடியாமல் போகும் சூழலில், அவர்கள் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள். இதற்காக, தமிழக அரசு இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் முதல் முதலாகத் தமிழகத்தில் தான் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நிமோன்ஸ் இன்ஸ்டியூட் வழங்கும் இப்பயிற்சி வாரந்தோறும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் நடைபெறும். ஒரு வாரத்திற்கு 40 பேர் வீதம், ஒரு ஆண்டுக்குள் அனைத்து போலீசாருக்கும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
மேலும், ஞாயிறன்று காவல்துறையினர் தங்களது குடும்பத்தோடு இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம். கோவையில் காவலர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் பொருட்டு, சம்மந்தப்பட்ட காவலருக்கு பிறந்தநாள் அல்லது திருமண நாள் குறித்து தகவல் தெரிந்தால், அவருக்குக் கட்டாய விடுப்பும், வாழ்த்து மடலும் அளிக்கப்படுகிறது," என்றார்.