கோவை : கோவை மத்திய சிறை வளாகம் முதல் நேரு மைதானம் வரையிலான சாலைகளை இரவுநேரங்களில் திருநங்கைகள் சிலர் பாலியல் தொழில் கூடாரங்களாக பயன்படுத்தி வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : கோவை மத்திய சிறை வளாகம் முதல் நேரு மைதானம் வரையிலான சாலைகளை இரவுநேரங்களில் திருநங்கைகள் சிலர் பாலியல் தொழில் கூடாரங்களாக பயன்படுத்தி வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தின் மத்தியப் பகுதியாக இருப்பது காந்திபுரம் ஆகும். நகரப் பேருந்து நிலையம், வெளியூர் மற்றும் வெளிமாநில பேருந்து நிலையங்களும் அமைந்துள்ளன. எனவே, இப்பகுதியில் 24 மணிநேரமும் பொதுமக்களின் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். இப்படிபட்ட பிஷியான இந்தப் பகுதிகளை திருநங்கைகள் எந்தவித தடையுமின்றி பாலியல் தொழில் கூடாரமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இரவுநேரங்களில் சாலைகளில் உலா வரும் திருநங்கைகள் பணத்திற்காக, ஆண்களைக் கவர்ந்து பாலியல் செயல்களுக்கு அழைத்துச் செல்கின்றனர்.
குறிப்பாக, கோவை மத்திய சிறை வளாகம் முதல் நேரு விளையாட்டு மைதானம் வரையில் நள்ளிரவில் யாரும் செல்ல முடியாத அளவிலான பாலியல் அட்டூழியங்கள் நடைபெறுகின்றன. காட்டூர் காவல்நிலையம் இதற்கு அருகாமையிலேயே அமைந்திருந்தும், இதனை தடுக்க போலீசார் தயங்குகின்றனர். இதுபோன்ற செயல்களை சாலைகளில் செல்லும் இளைஞர்கள் கண்டு, அவர்களும் இந்த சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுகிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
"பல்வேறு பகுதிகளை இணைக்கும் கோவை மாநகரின் முக்கிய சாலை, ஒவ்வொரு நாள் முடிவிலும் திருநங்கைகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது," இவ்வாறு கூறுகிறார் பொதுமக்களைச் சேர்ந்த ஒருவர்.
இதேபோல, கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் இருக்கும் எருக்கம்பெனி நிறுத்தம் முதல் வெள்ளக்கிணறு பிரிவு வரையில் நள்ளிரவு நேரங்களில் சாலையோரங்களில் திருநங்கைகள் நின்று கொண்டு இருக்கின்றனர். அந்த சாலைகளில் பெரும்பாலான நிறுவனங்கள் இயங்கி வருவதால், அங்கு நிறுத்தி வைக்கப்படும் லாரியின் ஓட்டுநர்கள் மற்றும் நள்ளிரவில் திரையரங்குகளுக்குச் சென்று வருபவர்களிடத்தில் திருநங்கைகள் அத்துமீறுகின்றனர். அதிலும், ஒருசில போதை ஆசாமிகள், குடிபோதையில் திருநங்கைகளுடன் சேர்ந்து போடும் கும்மாளம் அந்த வழியாகச் செல்பவர்களை வேதனைக்குள்ளாக்குகிறது.
இது தொடர்பாக திருநங்கைகள் நல ஆர்வலர் கல்கி சுப்ரமணியம் சிம்ப்ளிசிட்டியிடம் கூறியதாவது :- தான் ஒரு திருநங்கை என உணரும் ஒவ்வொருவரும் குடும்பத்தை விட்டு வெளியேறி விடுகின்றனர். அவர்களுக்கு சமுதாயத்தில் வேலைவாய்ப்பும் மறுக்கப்படுகிறது. இதனால், அவர்கள் இந்தப் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுகின்றனர். கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இருபாலினர் மட்டுமே உயர்ந்த நிலையில் இருக்கின்றனர். திருநங்கைகளுக்கான வாய்ப்பு நிராகரிக்கப்படுகிறது, என்றார்.
திருநங்கைகள் சாலை ஓரங்களில் இதுபோன்ற அநாகரிகமான செயல்களில் ஈடுபடுவது அனைவரிடத்தில் முகம் சுழிக்கும் வகையில் இருந்தாலும், அங்குள்ள நடைபாதை வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
"பாலியல் தொழிலில் ஈடுபடும் திருநங்கைகளால் நள்ளிரவு நேரங்களில் வாகனங்களை இந்தப் பகுதிகளில் நிறுத்த பொதுமக்கள் தயங்குகின்றனர்," எனக் கூறுகிறார் கடைக்காரர்.
சமுதாயத்தில் புறக்கணிப்பது மற்றும் அவர்களுக்கான உரிமையை வழங்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், வேறுவழியின்றி திருநங்கைகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். எனவே, அவர்களுக்கு மதிப்பளித்து, அனைத்துத் துறைகளிலும் சமஉரிமைகள் வழங்கப்படும் பட்சத்தில், பாலியல் தொழில்களில் திருநங்கைகள் ஈடுபடுவதைத் தடுக்க முடியும் என்பதே நிதர்சனமான உண்மை. மேலும், இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடும் திருநங்கைகளுக்கு, சம்பவ இடத்திலேயே அபராதம் விதிப்பதுடன், அவர்களுக்கு மறுவாழ்வு கிடைக்கும் வகையிலான செயல்களில் போலீசார் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.