கோவை : கஜா புயலால் பாதிப்பு நிவாரணமாகக் கோவையை சேர்ந்த ஆறு வயது சிறுமி, தான் சேர்த்து வைத்த உண்டியல் பணம் மற்றும் விளையாட்டு பொம்மைகளை அனுப்பி வைத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : கஜா புயலால் பாதிப்பு நிவாரணமாகக் கோவையை சேர்ந்த ஆறு வயது சிறுமி, தான் சேர்த்து வைத்த உண்டியல் பணம் மற்றும் விளையாட்டு பொம்மைகளை அனுப்பி வைத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கவுண்டர்மில்ஸ் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் மீத்தா தம்பதியரின் 6 வயது மகள் தமிழினி. தனது மகளிடம் சிறு வயது முதலே சேமிக்கும் பழக்கத்தை உருவாக்கும் விதமாக, பெற்றோர் ஒரு உண்டியல் வாங்கி கொடுத்து, அவ்வப்போது பண்டிகை மற்றும் பிறந்தநாள் விழாக்களின் போது பணம் வழங்கி வருகின்றனர். அந்த பணத்தை பெறும் தமிழினி அவற்றை தான் வைத்திருக்கும் உண்டியில் இட்டு சேமித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கஜா புயலின் கோர தாண்டவத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாகை, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் நிலையை தொலைக்காட்சிகளில் பார்த்த அச்சிறுமி தனது தந்தையிடம் சென்று தனது உண்டியல் பணத்தை எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்குமாறு கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, தான் விளையாடி மகிழும் பொம்மைகளையும் விற்று அதில் வரும் பணத்தையும் எடுத்து நிவாரணமாக வழங்குமாறு வேண்டியதுடன் அனைத்து தரப்பு மக்களும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார் அச்சிறுமி.

இதையடுத்து, உண்டியலை பிரித்து கணக்கிட்ட அவரது பெற்றோர், அதில் 12 ஆயிரத்து 404 ரூபாய் இருந்ததைக் கண்டறிந்துள்ளனர். தொடர்ந்து, அப்பணத்தை நிவாரணமாக வழங்குவதாகவும் சிறுமி விளையாடிய 20-க்கும் மேற்பட்ட பொம்மைகளை பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள குழந்தைகள் விளையாட அனுப்பி வைப்பதாகவும் சிறுமியின் பெற்றோர் தெரிவித்தனர்.

தினந்தோறும் அரசியல் கட்சியினர் தன்னார்வ அமைப்பினர் லட்சக்கணக்கில் நிவாரணப் பொருட்களை அனுப்பி வரும் நிலையில், இச்சிறுமியின் நிவாரண உதவி பல கோடி மதிப்புடையது என்பது மட்டும் உண்மை.