கோவை : கோவை தேயிலை வர்த்தக மையத்தில் நடைபெற்ற விற்பனையில் சுமார் ரூ.4.67 கோடி மதிப்பிலான தேயிலைத்தூள் விற்பனையாகியுள்ளது.
கோவை : கோவை தேயிலை வர்த்தக மையத்தில் நடைபெற்ற விற்பனையில் சுமார் ரூ.4.67 கோடி மதிப்பிலான தேயிலைத்தூள் விற்பனையாகியுள்ளது.
கோவை, நீலகிரி மாவட்டங்களில் உற்பத்தியாகும் தேயிலைத்தூளை மொத்த விற்பனைக்காக ஜி.என்.மில்ஸ் பகுதியில் அமைந்துள்ள தேயிலை வர்த்தக மையத்திற்குக் கொண்டு வரப்படுவது வழக்கம். அங்கிருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையின் போதும் உள்ளூர் பயன்பாடு மற்றும் ஏற்றுமதிக்காக தேயிலைத்தூள் ரகங்களை மொத்தமாக வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற விற்பனையில் சுமார் 4.15 லட்சம் கிலோ தேயிலை விற்பனையானது. இதில் டஸ்ட் என்ற உள்ளூர் ரகத் தேயிலை 3.25 லட்சம் கிலோ கொண்டுவரப்பட்டது. இதில் 3.04 லட்சம் கிலோ விற்பனையானது.
இதேபோல், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் லீப் ரகம், 1.32 லட்சம் கிலோ கொண்டுவரப்பட்டது. இதில் 1.11 லட்சம் கிலோ விற்பனையானது. விற்றுத் தீர்ந்த தேயிலையின் மொத்த மதிப்பு ரூ.4.67 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தை ஒப்பிடுகையில், தேயிலைத்தூள் உள்ளூர் ரகம் விலை ரூ.2.86 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.113.16 க்கு விற்பனை செய்யப்பட்டது. லீப் ரகத்தைப் பொறுத்தவரை விலை ரூ.2.42 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.109.33 க்கு விற்பனை செய்யப்பட்டது.
உலகளவில் தேயிலைத்தூளின் விற்பனை அதிகரித்திருப்பதால், உள்ளூரிலும் அதன் விற்பனை விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கருதுகின்றனர்.