திருப்பூர்: உடுமலை அருகே கரடி தாக்கியதில் மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர்: உடுமலை அருகே கரடி தாக்கியதில் மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூா் மாவட்டம் உடுமலை வனச்சரகத்தில் குழிப்பட்டி , குருமலை, கோடந்தூா், தளிஞ்சி, மஞ்சம்பட்டி, மாவடப்பு உள்ளிட்ட 18 மலைவாழ் கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களுள் ஒன்றான குருமலையில் நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சிவா (21) அவரது மனைவி அரசி (18). இவர்களுக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
நேற்று மாலை, சிவா காட்டிற்குள் வீடு கட்டுவதற்கான கொடி அறுப்பதற்குச் சென்றுள்ளார். அங்கு, கரடி நிற்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தவர் அச்சத்தில் தப்பி செல்ல முயன்றுள்ளார். அப்போது சிவாவை கரடி பலமாகத் தாக்கியுள்ளது. அவரின் அலறல் சத்தம் கேட்ட கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து கரடியை விரட்டியுள்ளனர்.
கரடியின் தாக்குதலால் படுகாயமுற்ற சிவாவை, அப்பகுதி மக்கள் தொட்டில் கட்டி திருமூா்த்திமலைக்கு தூக்கி வந்தனர். வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்த பின்பு ஆம்புலன்ஸ் மூலம் உடுமலை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்த்தனர். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும், உடுமலை மற்றும் அமராவதி வனப்பகுதியில் யானை, கரடி, புலி, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.