கோவை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் கம்பங்களை சீர் செய்யும் பணியில் தமிழ்நாடு மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தை சார்ந்த 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கோவை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் கம்பங்களை சீர் செய்யும் பணியில் தமிழ்நாடு மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தை சார்ந்த 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் 16-ம் தேதி தமிழகத்தை கஜா புயல் தாக்கியது. இதில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி , திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால் இந்த மாவட்டங்களில் மின் தடைகளை சரி செய்யும் பணியை மின் வாரிய ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, தமிழகம் முழுவதிலும் இருந்து மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் கம்பங்களை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஒப்பந்த ஊழியர்களுக்கு மின்வாரியத்தில் போதிய அங்கீகாரம் இல்லை, ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மின்வாரியத்தில் தொடர்ந்து பணிபுரியு ஒப்புதல் வழங்க வேண்டும், தொழிலாளர்களை அடையாளம் கண்டு அடையாள அட்டை வழங்கிட வேண்டும், ஒப்பந்த பணியாளர்களுக்கு அமைச்சர் அறிவித்த குறைந்தபட்ச ஊதியம் ரூ.380 வழங்க வேண்டும் என பல்வேறு போராட்டங்களை இவர்கள் மேற்கொண்டு வந்தனர்.

இந்த சூழலில், புயல் பாதித்த பகுதிகளில் உடனடியாக மக்களுக்கு மின்சாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக போராட்டங்களை ஒதுக்கிவிட்டு வழக்கம் போல பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் கோவை மண்டல செயலாளர் நாகராஜ் கூறுகையில், "கடந்த 1998-ம் ஆண்டு முதல் இன்று வரை கோவை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மின் வாரிய பிரிவு அலுவலகங்களிலும் சுமார் 2 ஆயிரம் பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக மின் பணிகளை செய்து வருகிறோம். ஆனால் கடந்த 2008-ம் ஆண்டு முதல் எந்த ஒரு பணியும் ஒப்பந்த பணியாளர்களை கொண்டு செய்வதில்லை என அரசுக்குத் தகவல் அனுப்புகிறது மின் வாரியம்.

புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் வந்தால் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 8 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் மின் கம்பங்களை சீர் செய்வது என அனைத்து மின் பணிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். ஆனால், எங்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய எந்த அதிகாரியும் முன்வருவது இல்லை." என்றார்.