கோவை: கோவையில் நாய் இறைச்சி விற்பனை செய்யப்படுகிறதா என்பது தொடர்பாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவையில் நாய் இறைச்சி விற்பனை செய்யப்படுகிறதா என்பது தொடர்பாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக நாய் இறைச்சி தொடர்பான பீதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. சிறிய உணவகங்கள் முதல் பெரிய உணவகங்கள் வரையிலும் இறைச்சி உணவு வகைகளை உண்ண மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சுமார் 2 ஆயிரம் கிலோ நாய் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டதாக வந்த தகவலை அடுத்து ஒட்டுமொத்த தமிழகமும் அதிருப்தியில் உள்ளது.

இந்த நிலையில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தையும், அச்சத்தையும் நீக்கும் வகையில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று கோவை முழுவதும் அதிரடி ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள் இன்று அதிகாலை 6.30 மணி முதல் இந்த திடீர் ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி கூறுகையில், "இன்று காலை 6.30 மணிக்கு வடவள்ளியில் இந்த ஆய்வு தொடங்கியுள்ளது. அங்கு உள்ள இறைச்சி கடைகளில் முதற்கட்ட ஆய்வு நடத்தினோம். அப்பகுதியில் மட்டும் 12-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது தரமான இறைச்சி விற்பனை செய்யப்படுகிறதா? அவை சுகாதார முறையில் பராமரிக்கப்படுகின்றனவா? உள்ளிட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து, தற்போது சாய்பாபா காலனி பகுதியில் ஆய்வு நடத்தி வருகிறோம். இங்குள்ள 8 கடைகளில் தற்போது ஆய்வு முடிந்துள்ளது. அதன்படி, எந்த கடைகளிலும் நாய் இறைச்சி விற்பனை செய்யப்படுவதில்லை என்பது உறுதியாகி உள்ளது.
தொடர்ந்து கோவை முழுவதும் பல்வேறு கட்ட சோதனைகள் நடத்தப்படும். இந்த ஆய்வின் முடிவில், விரிவான செய்தியறிக்கை வழங்கப்படும். மக்களின் நலனுக்காக உணவு பாதுகாப்புத்துறை பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது." என்றார்.