கோவை : மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அரசியல் இடையூறு காரணமாக சிறுநீரகச் சுத்திகரிப்பு மையம் திறக்கப்படாமல் இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அரசியல் இடையூறு காரணமாக சிறுநீரகச் சுத்திகரிப்பு மையம் திறக்கப்படாமல் இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் நகராட்சியில் சிறுமுகை, காரமடை, வீரபாண்டி, கூடலூர் ஆகிய 4 பேரூராட்சிகள் மற்றும் நூற்றுக்கணக்கான கிராமங்களை உள்ளடக்கிய 17 ஊராட்சிகள் உள்ளன. இதில், மலைவாழ் மக்கள் கல்லாறு, நெல்லித்துறை, தேக்கம்பட்டி, வெள்ளியங்காடு போன்ற பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் வறுமைக் கோட்டிற்கு கீழும், அடிப்படை வசதிகள் இன்றியும், தங்கள் வாழ்க்கையை சோகத்தில் கழித்து வருகின்றனர்.
இவர்கள் தங்களது ஆரோக்கியத்திற்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர். இப்படி மலைவாழ் மக்கள் முதல் அனைத்துப் பிரிவு மக்களும் உடல்நிலை பாதிக்கப்பட்டால் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த மேட்டுப்பாளையம் மருத்துவமனையில் தமிழக அரசின் சீரிய முயற்சிகளால் பல்வேறு மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டாயாலிசஸ் :
இன்றைய நவீனகால மனிதர்கள் தாங்கள் செல்லும் அவசரத்திற்கு ஏற்ப உணவுப் பழக்க வழக்கங்களையும் மாற்றியுள்ளனர். இந்த உணவு பழக்கங்கள் அவசரத்திற்கு வேண்டுமானால் உதவுமே தவிர. உடல்நலத்திற்கு ஏற்புடையதாக இருப்பதில்லை. இதனால். மனிதனுக்கு பல்வேறு நோய்கள் உண்டாகிறது. குறிப்பாக. உணவு பழக்கவழக்கங்களில் மாற்றங்களினால் சிறுநீரக பாதிப்புகள் அதிக அளவில் ஏற்படுகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்படி சிறுநீரக பாதிப்புகள் வரும் போது, மனிதனின் உடம்புக்குள் சிறுநீரகம் செய்யவேண்டிய பணிகளை, மருத்துவ சாதனங்களின் வாயிலாக உடம்புக்கு வெளியே செய்வது `டயாலிசிஸ்' எனப்படுகிறது. சிறுநீரக நிரந்தர செயலிழப்பு உடையவர்கள் வாரத்துக்கு 2 இரண்டு முறை வீதம் டயாலிஸிஸ் செய்துகொள்ள வேண்டும். இந்த டயாலிசிஸை தனியார் மருத்துவமனைகளில் செய்ய மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் ,
30 ஆயிரம் என மருத்துவமனைக்கு தகுந்தாற்போல பணம் செலவாகும்.
இதனால், சிறுநீரக பாதிப்புக்கு உள்ளான ஏழை, எளிய மக்கள் இந்த சிகிச்சையை செய்ய முடியாமல் தவித்து வந்தனர். குறிப்பாக, மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் உட்பட ஏழை எளிய மக்கள் இந்த சிகிச்சைகள் இன்றி தவித்து வந்தனர்.

மகிழ்ச்சியும்...! அதிருப்தியும்..!
மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிறுநீரக சுத்திகரிப்பு மையம் அமைத்துத் தர வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சுமார் ரூ. 20 லட்சம் மதிப்பில் சிறுநீரக சுத்திகரிப்பு மையத்தை அமைத்துக் கொடுத்தது. இது மேட்டுப்பாளையம் பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், இன்னும் பல நாட்களாக இந்த மையம் திறக்கப்படாமல் இருப்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
ஆகவே, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சிறுநீரக சுத்திகரிப்பு மையத்தை அமைத்துக் கொடுத்த தமிழக அரசு, விரைவில் அதனை நடைமுறைக்குக் கொண்டு வந்து மக்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என மேட்டுப்பாளையம் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அரசியல் காரணங்கள் :
இதுகுறித்து மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாட்சா கூறியதாவது :- மேட்டுப்பாளையம் பகுதி மக்களுக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிறுநீரக சுத்திகரிப்பு மையத்தை தமிழக அரசு அமைத்து கொடுத்துள்ளது. இந்த மையத்திற்கான இயந்திரங்கள் எல்லாம் ஓராண்டுகளுக்கு முன்பே மேட்டுப்பாளையம் மருத்துவமனைக்கு வந்துவிட்டது. இதற்காக கடந்த மே மாதத்தில் மருத்துவர்களும், மருத்துவ உதவியாளர்களும் பயிற்சியும் பெற்று வந்துவிட்டனர். இந்த மையமானது ஒரு மாதத்துக்கு முன்பே திறப்பு விழாவுக்குத் தயாராகிவிட்டது.

ஆனால், தற்போது வரை சிறுநீரக சுத்திகரிப்பு மையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படவில்லை. இதற்கு பல அரசியல் காரணங்கள் சொல்லப்படுகிறது. ஆனால், பொதுமக்களாகிய நாங்கள் இந்த அரசியல் காரணங்களை விரும்பவில்லை. ஏழை, எளியோரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அவசரம், அவசரமாக துவங்கப்பட இருந்த இந்த மையம் தற்போது கேட்பாரற்று பூட்டி கிடப்பது பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது, என்றார்.
பொதுமக்களின் சேவைக்காக என்னதான் அரசு நடவடிக்கைகள் எடுத்தாலும், ஒருசில அரசியல்வாதிகளின் சுயநலங்களால் பொதுமக்களின் தேவைகள் கிடப்பில் கிடப்பது பலபேரின் உயிரை பறிப்பதாக அமைந்துள்ளது. ஆகவே, தமிழக அரசு மக்களுக்காக அமைத்துக் கொடுத்த மருத்துவ சேவை மையத்தை விரைவாக திறந்து பொதுமக்கள் பயன்பெற உதவினால் நன்மை பயக்கும்.