கோவை : கோவையில் பன்றிக் காய்ச்சலுக்கான ரெட் அலார்ட் குறித்த வதந்தியான செய்தி வாட்ஸ்அப்பில் வேகமாக பரவி வருவதாகவும், யாரும் இதனை நம்ப வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கோவை : கோவையில் பன்றிக் காய்ச்சலுக்கான ரெட் அலார்ட் குறித்த வதந்தியான செய்தி வாட்ஸ்அப்பில் வேகமாக பரவி வருவதாகவும், யாரும் இதனை நம்ப வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- தற்போது கோவை மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சல், டெங்குக் காய்ச்சல் போன்ற நோய்கள் கட்டுக்கோப்பில் உள்ளது. திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல் மற்றும் திருச்சி போன்ற அண்டை மாவட்டங்களில் இருந்தும் மக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்காக கோவைக்கு வருகின்றனர். தற்போது, இந்த நோய்கள் கோவை மாவட்டத்தில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் மற்றும் சகாதார துணை இயக்குநரின் ஆணையின்படி, நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக சுகாதாரப் பணியாளர்கள் தொடர்ந்து துரிதமாக பணிபுரிந்து வருகின்றனர். இருப்பினும், கோவையில் பன்றிக் காய்ச்சலுக்கான ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப்பில் செய்தி பரவி வருகிறது.
துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, நோய் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதால், வாட்ஸ்அப்பில் வரும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும், அது குறித்து பீதியடைய வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், போதுமான அளவு பன்றிக் காய்ச்சல் சிகிச்சைக்கு தேவையான 'ஓசல்டாமிவிர்' மருந்துகள் அனைத்து அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது. நாள்தோறும், அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காலை, மாலை என இருமுறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுவதுடன், கை கழுவ ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இதுமட்டுமின்றி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பணியாளர்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய திட்டக்குழு, நடமாடும் மருத்துவக் குழுக்களின் மூலமாக நோய் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உடனிருக்கும் நபர்களுக்கும் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
பன்றிக் காய்ச்சலுக்கான ரெட் அலார்ட் இதுவரையிலும் அரசால் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், பொதுமக்கள் வாட்ஸ் அப்பில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.