கோவை : சட்டத்திற்கு புறம்பாக கோவை தெலுங்குபாளையத்தில் கிலோ கணக்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பான்பராக், குட்கா போன்ற போதைப் பொருட்கள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை : சட்டத்திற்கு புறம்பாக கோவை தெலுங்குபாளையத்தில் கிலோ கணக்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பான்பராக், குட்கா போன்ற போதைப் பொருட்கள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டன.
மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் & 2006-ன் படி நிகோடின், பான் போன்ற போதை தரும் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், தடை செய்யப்பட்ட பான்பராக் மற்றும் குட்கா பொருட்கள் கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சில்லறை கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலை அடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 2 டன் எடையிலான பான்பராக் மற்றும் குட்கா பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த நிலையில், தெலுங்குபாளையம் நெடுஞ்செழியன் வீதி பகுதியில் குட்கா பொருட்கள் குடோன்களில் பதுக்கி வைத்திருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதன்பேரில், நேற்று இரவு அங்கு சென்ற கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் லலிதாம்பிகை தலைமையிலான குழுவினர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகியான கோவை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் சின்னதுரை என்பவருக்கு சொந்தமான குடோனில் போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததைச் சோதனையில் கண்டுபிடித்தனர்.

இன்று காலை அந்த குடோனை ஆய்வு நடத்திய அதிகாரிகள் சுமார் 830 கிலோ எடையிலான புகையிலை பொருட்களைக் கைப்பற்றி குடோனுக்கு சீல் வைத்தனர்.
பின்னர், நடத்திய விசாரணையில் கோவை தாமஸ் வீதி பகுதியில் வசித்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கோவிந்த் சிங் என்பவர் சின்னத்துரையிடம் குடோனை கடந்த மாதம் வாடகைக்கு எடுத்திருந்ததும், கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து குட்கா பொருட்களை கோவைக்கு கொண்டுவந்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, கோவிந்த்சிங் மீது வழக்குப்பதிவு செய்துள்ள உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா மற்றும் புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.