நீலகிரி: குளிர்காலம் தொடங்க உள்ள நிலையில், குன்னூர் தேயிலை ஏல மையம் சார்பில் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்பட்ட அனைத்து ரக தேயிலைகளும் விற்று தீர்ந்திருப்பது விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் விளையும் தேயிலைகள் வெளிநாடு மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், விற்பனை எண் 46-க்கான தேயிலை அறிக்கை திங்கட்கிழமை வெளியிடப்பட்டது. அதன்படி, இந்த ஏலத்தில் 17 லட்சம் கிலோ தேயிலைகள் விற்பனைக்கு வந்தன. இதில், அனைத்து ரகங்களும் ஆன்லைன் மூலம் நடைபெற்ற ஏலத்தில் விற்கப்பட்டது.
கடந்து மூன்று வாரங்களில் சராசரியாக ஒரு கிலோ ரூ. 100 வரை விற்ற தேயிலைகள் ரூ. 5 வரை விலை உயர்ந்துள்ளது. நடுத்தரம் மற்றும் உயர் ரகத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

இது குறித்து தேயிலை வர்த்தகர்கள் தரப்பில் கூறுகையில், "இந்த விலை ஏற்றத்திற்கும், விற்பனை அதிகரிப்பிற்கும் காரணம் டிசம்பர் மாதத்தில் கடும் குளிர் நிலவுவதாகும். பனிப்பொழிவின் காரணமாக விளைச்சலும், தரமும் குறையும் என்பதால் வர்த்தகர்கள் நவம்பர் மாதம் நடைபெறும் அனைத்து ஏலத்திலும் அதிகம் கொள்முதல் செய்து வைத்துக் கொள்வார்கள்.
இதன் காரணமாகவே ஏலத்திற்கு வந்த அனைத்து ரகங்களும் விற்றதோடு விலையும் அதிகரித்துக் காணப்படுகிறது," என்கிறார்கள்.