கஜா புயலினால் உருக்குலைந்து கிடக்கும் டெல்டா மாவட்டங்களுக்கு ஆதரவாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
கஜா புயலினால் உருக்குலைந்து கிடக்கும் டெல்டா மாவட்டங்களுக்கு ஆதரவாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
ஊருக்கே சோறுபோட்ட தமிழக டெல்டா முழுதும் இன்று சோறு தண்ணிக்காக ஏங்குது. கஜா புயலால் அத்துணை துயரங்களை அனுபவித்து அடிப்படை தேவையை தேடும் நம் அன்பு நெஞ்சங்களுக்காக கரம் கோர்ப்போம். முடிந்ததை செய்வோம் உங்களோடு நான் துணை நிற்பேன் தமிழகமே.
என்று தமிழில் கருத்து பதிவிட்டுள்ளார். மேலும், கஜா புயல் அவசர உதவி எண்கள் அடங்கிய புகைப்படத்தையும் இணைத்து தந்து டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழக டெல்டா மாவட்டங்களான நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் தாக்கத்தை ஏற்படுத்திய கஜா புயலால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. புயலினால் இதுவரை 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஏராளமான விலங்குகளும் பலியாகியுள்ளன. நெற்பயிர்கள், வாழை மற்றும் தென்னை மரங்கள் நூற்றுக்கணக்கில் வேரோடு சாய்ந்துள்ளன. நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசியது.
இதனால் மொத்தம் 1 லட்சத்து 70,454 மரங்கள் வேரோடு சாய்ந்தன. புயலால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சீரமைப்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் சென்று பார்வையிட்டு நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.