சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்பை அமல்படுத்த, கால அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய திருவாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. இதனால், பெண்களுக்கு இப்போதைக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்பை அமல்படுத்த, கால அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய திருவாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. இதனால், பெண்களுக்கு இப்போதைக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குச் செல்ல 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி இல்லை. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று கடந்த செப்டம்பர் 28-ம் தேதி தீர்ப்பளித்தது.
இதைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் 17-ம் தேதி ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோயில் நடை திறக்கப்பட்டபோது, சில இளம்பெண்கள் கோயிலுக்குச் செல்ல முயன்றனர். இந்து அமைப்பினரின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். கடந்த 22-ம் தேதி கோயில் நடை சாத்தப்பட்டது.
இந்த நிலையில் மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துபவர்களை கட்டுப்படுத்த ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பாலின சமத்துவ ஆர்வலர் திருப்தி தேசாய் மற்றும் அவரது சக ஆர்வலர்களும் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.40 மணியளவில் புனேயில் இருந்து கொச்சி வந்து சேர்ந்தனர். அவர்களை வெளியே வரவிடாமல், பா.ஜ.க. மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டனர்.
சுமார் இரண்டு மாதகாலம், மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு தரிசன காலத்தில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருவார்கள் என்பதால் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. பெண்கள் அனுமதிக்கப்பட்டால் போராட்டத்தால் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருப்பதால் இதுகுறித்து திருவாங்கூர் தேவசம் போர்டின் அவசரக்கூட்டம் இன்று பம்பையில் கூடியது.
கூட்டத்துக்கு பின் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் கூறியதாவது:- சபரிமலையில் தற்போது மண்டல பூஜை தொடங்கியுள்ளதால் அதுகுறித்து விரிவாக விவாதித்தோம். கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த கால அவகாசம் தேவை. இதுதொடர்பாக நாளை அல்லது திங்கட்கிழமை உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு சார்பில் மனுத்தாக்கல் செய்யவுள்ளோம், இவ்வாறு அவர் கூறினார்.