கோவை : கோவை மாநகரில் உள்ள காவலர்களுக்கு 3 நாள் காவலர் நிறைவாழ்வு பயிற்சி வகுப்பை கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
கோவை : கோவை மாநகரில் உள்ள காவலர்களுக்கு 3 நாள் காவலர் நிறைவாழ்வு பயிற்சி வகுப்பை கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

பணிச்சுமை மற்றும் மனஅழுத்தம் காரணமாக தமிழக காவல்துறையில் பணியாற்றும் போலீசார் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அதேபோல, இந்த மன அழுத்தங்களினால் சில போலீசார் தற்கொலையும் செய்து வருகின்றனர். பொதுமக்களின் சேவைக்காக செயல்படும் போலீசார் மன அழுத்தங்களுடன் பணிகளில் ஈடுபடுவது பல நேரங்களில் குழப்பங்களை ஏற்படுத்துகிறது. இதனால், அவர்களின் உடல்நிலையும் பாதிக்கப்படுகிறது.

இந்த நிலையில், காவலர்களை மனஅழுத்தத்தில் இருந்து மீட்பதற்கான காவலர் நலன் காக்கும் "காவலர் நிறைவாழ்வு பயிற்சி" என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த காவலர் நிறைவாழ்வு திட்டம் இன்று கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் தொடங்கியது. கோவை மாநகர காவல்துறையில் உள்ள காவலர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் மனஅழுத்தத்தை கையாள்வது குறித்து 3 நாள் பயிற்சி வகுப்புகள் இன்று முதல் நடக்கிறது. இதில், முதல் இரண்டு நாள் காவலர்களுக்கும், மூன்றாம் நாள் காவலர்களுடன், அவர்களது குடும்பத்தினருக்கும் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

இந்தப் பயிற்சி திட்டத்தை கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில், கோவை மாநகர காவல் துறை துணை ஆணையாளர் (சட்டம் - ஒழுங்கு) டாக்டர் எல்.பாலாஜி சரவணன், துணை ஆணையாளர் (குற்றம்) பி.பெருமாள், போக்குவரத்து துணை ஆணையாளர் சுஜித் குமார் மற்றும் பல உயர் அதிகாரிகள் காவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.