கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பள்ளிகளில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பள்ளிகளில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

இதில் மாநகராட்சிக்கு உட்பட்ட 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 2,129 மடிக்கணினிகளை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். பின்னர் மாணவர் மத்தியில் பேசிய அமைச்சர், "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் இந்த இலவச மடிக்கணினி திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் தற்போது வரை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் உள்ளி பள்ளிகளுக்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் இலவச ஐ.ஏ.எஸ் அகாடமி அமைக்க உள்ளோம். படித்து முடித்த இளைஞர்கள் பணிக்கான நேர்காணலுக்குச் செல்லும் போது அங்கு சிறப்பாக செயல்படுவதில்லை. இதற்காக கோச்சிங் சென்டர்கள் அமைக்கப்பட உள்ளது.

மாணவர்கள் சிறப்பாக படித்து அரசு அதிகாரிகளாக வேண்டும் என்பதற்காக இவற்றை செய்து வருகிறோம். தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளில் தரமான ஆசிரியர்கள் உள்ளனர்." என்றார்.

இதனைத்தொடர்ந்து விழா மேடையில் இருந்த படியே காவல் துறையினரிடம் பேசிய அவர், "நிகழ்ச்சிகளுக்கு எனது வாகனம் வரும் போது மக்களை முன் கூட்டியே தடுத்து நிறுத்துவதைத் தவிர்க்க வேண்டும். எனது கார் வரும் போது பொது மக்களைத் தடுக்க வேண்டாம் என ஏற்கனவே காவல் துறையினருக்கு இது தொடர்பாக அறிவுறுத்தி உள்ளேன். இனிமேல் மக்களை தடுக்கக் கூடாது." என்றார்.