சபரிமலையில் அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கை ஜனவரி 22-ம் தேதி மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
சபரிமலையில் அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கை ஜனவரி 22-ம் தேதி மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல தடை இருந்து வந்த நிலையில், அங்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28–ந்தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு அய்யப்ப பக்தர்களும், இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் மற்றும் பாரதீய ஜனதா கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்யமாட்டோம் என்றும், தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்து இருந்தார். இதேபோல, சபரிமலை அய்யப்பன் கோவிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டும் மறுஆய்வு மனு தாக்கல் செய்வது இல்லை என்று தீர்மானித்தது.
ஆனால், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட அனுமதி வழங்கிப் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து தேசிய அய்யப்ப பக்தர்கள் சார்பில் அந்த அமைப்பின் தலைவர் ஷைலஜா விஜயன் உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்தார். கடந்த அக்டோபர் 9-ந்தேதி இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. ஆனால், மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், வழக்கு பட்டியலிடப்பட்ட பின் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தது. சபரிமலை விவகாரத்தில் ஏராளமான ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.
இந்த நிலையில், இன்று பிற்பகல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கக் கோரிய வழக்கு, வரும் ஜனவரி 22-ம் தேதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு மீண்டும் விசாரணை நடத்துகிறது. இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட 49 சீராய்வு மனுக்களை மீண்டும் விசாரித்தாலும், தற்போதைய உத்தரவுக்கு தடை கிடையாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.