கோவை: கடந்த 24 மணிநேரத்தில் கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
கோவை: கடந்த 24 மணிநேரத்தில் கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் திருப்பூர், ஈரோடு, நீலகிரி போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பொதுமக்கள் பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். தினமும் ஏறத்தாழ 800 பேர் வெளி நோயாளிகளாக காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெறுகின்றனர். இன்று அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பில் 28 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, டெங்கு காய்ச்சலுக்கு 5 பேர், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 184 பேர் என மொத்தம் 217 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 9-ம் தேதி பன்றிக் காய்ச்சல் பாதிப்பில் அனுமதிக்கப்பட்டிருந்த ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த சுப்பிரமணியம் (56) என்பவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல, திருப்பூர் மாவட்டம் கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் (44) என்பவரும் நேற்று இரவு பலியானார். பன்றிக் காய்ச்சலுக்கு அடுத்தடுத்து இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சேக நோயாளிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நீலிகோணாம் பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வன் (54) என்பவர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், காய்ச்சலின் வீரியம் அதிகரித்தால், அங்கிருந்து, இன்று பிற்பகல் 2 மணிக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, அதாவது சுமார் 03,15 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதன்மூலம், கடந்த 24 மணிநேரத்தில் கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.