நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் தாயை பிரிந்து சுற்றித்திரிந்த 5 வயது குட்டி யானைக்கு காட்டெருமை ஒன்று நண்பனாக மாறிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் தாயை பிரிந்து சுற்றித்திரிந்த 5 வயது குட்டி யானைக்கு காட்டெருமை ஒன்று நண்பனாக மாறிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
குன்னூரில் பலாப்பழம் சீசன் கடந்த இரண்டு மாதமாக இருந்தது. இதனால் சமவெளி பகுதியிலிருந்த காட்டுயானைகள் குன்னூரை நோக்கி கூட்டம் கூட்டமாக படையெடுத்து வந்தன. சீசன் முடிந்ததும் காட்டு யானைகள் மீண்டும் சமவெளி பகுதிகளுக்கே திரும்பிச் சென்றன.
இதில் கூட்டத்திலிருந்து தாயை பிரிந்த 5 வயது குட்டியானை மட்டும் தனியாக சுற்றித்திரிந்தது. கடந்த ஒரு வார காலமாகவே அந்த குட்டியானை என்.ஆர். நகர், நஞ்சப்புரசத்திரம், டைகர் ஹில் பகுதியில் உலா வந்து கொண்டிருந்தது.
தற்போது, அந்தப் பகுதியில் இருந்த காட்டெருமை ஓன்றுடன் நண்பனாகியுள்ளது அந்த குட்டியானை. எங்கு சென்றாலும் காட்டெருமையுடன் குட்டியானை பின் செல்கிறது. அந்த யானையை விரட்ட வனத்துறையினர் முயற்சி செய்தால் காட்டெருமை ஆக்ரோஷமடைகிறது.
காட்டெருமையை விரட்ட முயற்சி செய்தால் குட்டி ஆண் காட்டு யானை ஆக்ரோஷமடைகிறது. இவை இரண்டையும் பிரிக்கும் முயற்சியில் வனத்துறையினர் குழு முகாமிட்டு முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
தாயை பிரிந்த குட்டி காட்டு யானையை, காட்டெருமை அரவணைத்துச் செல்வது அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், வனத்துறையினர் இவை இரண்டையும் பிரிக்க வேண்டாம் என்று இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.