கோவை : கோவை மாவட்டத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு, தனியார் மருத்துவமனைகளே காரணம் என கோவை அரசு மருத்துவமனையின் முதல்வர் அசோகன் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை : கோவை மாவட்டத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு, தனியார் மருத்துவமனைகளே காரணம் என கோவை அரசு மருத்துவமனையின் முதல்வர் அசோகன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக சிம்ப்ளிசிட்டிக்கு பிரத்யேகமாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :- கோவை மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த மூன்று வாரங்களாக காய்ச்சலின் பாதிப்பில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடந்த 15 நாட்களில் தான் பன்றிக் காய்ச்சல் பாதிப்பில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பன்றிக்காய்ச்சலானது குளிர்காலங்களில் தான் அதிகம் பரவக்கூடியது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு போதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான சிகிச்சையும் கோவை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் அளிக்கப்பட்டு வருகிறது.
நமது கோவை அரசு மருத்துவமனைக்கு திருப்பூர், நீலகிரி, ஈரோடு, பழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து சிகிச்சை பெறுகின்றனர். மேலும், வழக்கமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வெளிநோயாளிகள் 70 முதல் 80 பேர் வரை சிகிச்சை பெறுவர். ஆனால், தற்போது காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
கோவையில் காய்ச்சல் பாதிப்பு :
இன்று கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் 5 பேரும், பன்றிக் காய்ச்சல் பாதிப்பில் 37 பேரும், சாதாரண காய்ச்சலில்
63 பேர் என மொத்தம் 105 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் வெளிநோயாளிகளாக கிட்டத்தட்ட 500 முதல் 800 பேர் வரை சிகிச்சை பெறுகின்றனர். குறிப்பாக, இன்று காலை 10 மணிக்குள் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற சுமார் 700 பேர் வரை வந்தனர். இப்படி வருபவர்களுக்கு முதற்கட்டமாக தட்டணுக்கள், வெள்ளை மற்றும் சிவப்பு அணுக்கள் சோதனைகளை செய்து சிகிச்சைகள் அளிக்கிறோம்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கான சிறப்பு வார்டுகளை தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, பாதுகாப்பாக வைத்துள்ளோம். அதேபோல, பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்குப் பிரிவு வாரியாக தனியாக வார்டுகளை பிரித்துள்ளோம். அதிலும், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என பாதுகாப்பு காரணங்களுக்காக தனித்தனியாக பிரித்துள்ளோம்.
அதேபோல, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தட்டை அணுக்கள் குறைவாக உள்ளவர்களுக்கு தனியாக வார்டு அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இப்படி காய்ச்சல்களில் பல வகையாகப் பிரித்து பாதுகாப்பான முறையில் சிகிச்சை அளித்து வருகிறோம்.
பன்றி காய்ச்சல் அறிகுறிகள் :
பொதுமக்கள் இரும்பல், காய்ச்சல், தும்மல், தலைவலி, மூச்சுவிட சிரமம் போன்ற அறிகுறிகள் ஏற்படும் பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற வேண்டும். இல்லையெனில், மோசமான சூழல்கள் ஏற்படும். ஆகவே, அறிகுறிகள் தெரிந்தவுடன் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.
வரும் முன் காப்பதே சிறந்தது :
பொதுமக்கள் காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படும்போது சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும். அதேபோல, பரவிவரும் காய்ச்சல் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த கோவை அரசு மருத்துவமனையில் கிருமிநாசினிகள் போட்டு பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களை சுத்தம் செய்து வருகிறோம். நோய்கள் தாக்காமலிருக்க பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக்கொண்டு கை, கால்களை சுத்தமாக கழுவ வேண்டும்.
மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் என தேவைப்படுபவர்களுக்கு எல்லாம் முன்னெச்சரிக்கை தடுப்பூசிகளை போட்டு வருகிறோம். கை, கால் மற்றும் முகங்களை சுத்தமாக கழுவி சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக் கொண்டால் பன்றி காய்ச்சல் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். பன்றி காய்ச்சல் என சந்தேகம் ஏற்படும் நோயாளிகளுக்கு உடனடியாக தடுப்பு மாத்திரைகளை கொடுத்தால் தப்பித்துக் கொள்ளலாம்.
தனியார் மருத்துவமனைகளே காரணம் :
கோவை அரசு மருத்துவமனையில் பன்றி மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் அதிகரித்து வரும் மரணங்களுக்குக் காரணம் தனியார் மருத்துவமனைகளே. நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொண்டு கடைசி நேரத்தில் உடல் முழுமையாகப் பாதிக்கப்பட்டு உடலில் உள்ள உறுப்புகள் எல்லாம் செயல் இழந்த பின்பு கோவை அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். இதனால், நோயாளியைப் பிழைக்க வைப்பது பெரும் சவாலாக உள்ளது. இப்படி தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொண்டு, கடைசி நேரத்தில் இங்கு வருவதால் அரசு மருத்துவமனையில் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது.
பன்றி காய்ச்சலில் பாதிக்கப்பட்டு உரிய நேரத்தில் கோவை அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறும் நோயாளிகள் 90% முதல் 95% வரை உயிர் பிழைத்து செல்கின்றனர். ஆகவே, பொதுமக்கள் இந்த விஷயத்தில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் அறிவுரை :
காய்ச்சலில் இருக்கும் குழந்தைகளுக்கு தேர்வுகளைக் காரணம் சொல்லி சக மாணவர்களுடன் பள்ளியில் அனுமதிப்பது மற்ற மாணவர்களுக்கும் பரவச் செய்யும். ஆகவே, இது குறித்து ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெற்றோர்களும் இதைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். அரசு மருத்துவமனைகளில் அனைத்து காய்ச்சலுக்குமான மாத்திரைகள் மற்றும் மருந்துகள் தயார் நிலையில் உள்ளன. ஆகவே, பொதுமக்கள் நோய்கள் குறித்து அஞ்ச வேண்டாம்.
பரவி வரும் பன்றி காய்ச்சலானது சுத்தமில்லாததாலும், நோய் குறித்த அறியாமையினாலும் வரக்கூடியது. ஆகவே, பொதுமக்கள் எச்சரிக்கையாய் இருந்தால் பன்றி காய்ச்சல் பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம், இவ்வாறு அவர் கூறினார்.