கோவை : கிணத்துக்கடவு வட்டாரத்தில் இருக்கும் 75 பள்ளிகளில் பயிலும் வகுப்பு மாணவர்களுக்கு இன்னும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படாத விவகாரம் தொடர்பாக, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் மனு அளித்தார்.
கோவை : கிணத்துக்கடவு வட்டாரத்தில் இருக்கும் 75 பள்ளிகளில் பயிலும் வகுப்பு மாணவர்களுக்கு இன்னும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படாத விவகாரம் தொடர்பாக, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் மனு அளித்தார்.
கோவை - பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள கிணத்துக்கடவு பகுதியில் செயல்பட்டு வரும் ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் தேர்வு விடுமுறைகள் முடிந்து 2-வது கட்ட தேர்வுக்கான வகுப்புகள் தொடங்கிவிட்டன. ஆனால், இன்னும் தமிழக அரசின் இலவசப் பாடபுத்தகங்கள் வழங்கப்படவில்லை எனப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ் மற்றும் ஆங்கில வழியில் 5-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைனில் இருந்து பாடத்திட்டங்களை பதிவிறக்கம் செய்து ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றனர்.
குறிப்பாக, கிணத்துக்கடவு வட்டாரத்தில் மட்டும் 75 பள்ளிகளில் சுமார் 5,324 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அதில், 1,088 மாணவர்கள் 5-ம் வகுப்பு பயின்று வருகின்றனர்.
"கிணத்துக்கடவு வட்டாரத்தில் செயல்பட்டு வரும் 75 பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயிலும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு இதுவரை பாடப்புத்தகங்கள் வழங்கப்படவில்லை. மாணவர்களின் எதிர்காலத்தில் அரசு மற்றும் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது," என சமூக ஆர்வலர் மணி கூறுகின்றார்.
இது தொடர்பாக கடந்த வாரம் வட்டாரக் கல்வி அலுவலர் ஷர்மிளாவிடம் கேட்டபோது, "தர்மபுரி, தமிழ்நாடு பாடப்புத்தகக் கழகத்திடம் இருந்து மாவட்ட கல்வி அலுவலகம் பாடப்புத்தகங்களைப் பெற்றுள்ளது. இனி, பள்ளி வாரியாக விநியோகம் செய்யும் பணிகளுக்காகக் காத்திருக்கிறோம். கிணத்துக்கடவு வட்டாரத்தில் பயிலும் மாணவர்களுக்கு 645 புத்தகங்கள் தேவைப்படுவதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விரைவில் அவர்களுக்குப் பாடப்புத்தகங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்," இவ்வாறு கூறியிருந்தார்.
சமூக ஆர்வலர் மணியின் குழந்தையும் கிணத்துக்கடவு அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வரும் நிலையில், அவர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் கலந்து கொண்டு மனு ஒன்றை அளித்துள்ளார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- 2-வது கட்ட தேர்வுக்கான வகுப்புகள் தொடங்கி 40 நாட்களுக்கும் மேலாகியும் இன்னும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படவில்லை. இதனால், எதிர்வரும் தேர்விற்காக மாணவர்கள் தயாராகாத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அரசும் இந்த விவகாரம் மெத்தனமாக இருக்கிறது, என்றார்.
இது குறித்து மாவட்ட தலைமை கல்வி அலுவலரிடம் கேட்ட போது, "கிணத்துக்கடவு வட்டாரத்தில் உள்ள பள்ளிகளில் சில புத்தகங்கள் வழங்கப்பட்டு விட்டன. எஞ்சிய புத்தகங்கள் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சமூக ஆர்வலர் இன்று செய்தியாளர்களிடம் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது," எனக் கூறினார்.