கோவை: கோவை விமான நிலையத்தில் நேற்று(சனிக்கிழமை) முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
கோவை: கோவை விமான நிலையத்தில் நேற்று(சனிக்கிழமை) முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறும்போது, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.ஏல்.ஏ.,க்களால் அந்த தொகுதியில் பணிகள் அங்கு முடங்கி இருக்கின்றது. துரோகம் செய்தவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார். அந்த 18 தொகுதிகள் மட்டுமல்ல, 234 தொகுதிகளிலும் மக்கள் நல பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. டிடிவி தினகரன் தான் துரோகி. எதிரிகளுடன் சேர்ந்து அவர் சதி செய்து கொண்டு இருக்கின்றார் எனவும் தெரிவித்தார்.
கடந்த 2016-ம் ஆண்டு ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதி அறிவிக்கும் போது எல்லோரிடமும் செல்போன் இல்லை எனவும், இப்போது எல்லோரிடமும் இருக்கின்றது. என்றாலும் இலவச செல்போன் திட்டம் அரசின் பரிசீலனையில் இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் அ.தி.மு.க.,வினர் மூன்று பேரை விடுவிக்க தமிழக அரசு வலியுறுத்தி இருக்கின்றது எனவும், ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக்கு இறுதி முடிவு கவர்னர் தான் எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தி.மு.க தலைவர் ஸ்டாலின் பச்சோந்தி போல் செயல்பட்டு கொண்டு இருக்கின்றார் என தெரிவித்த அவர், பாஜகவுடன், திமுக கூட்டணி வைக்கும் போது ஸ்டாலினுக்கு அது மதவாத கட்சியாக, தீண்டத்தகாத கட்சியாக தெரியவில்லையா? எனவும் கேள்வி எழுப்பினார்.
பா.ஜ.க சறுக்குகின்ற போது அவர்கள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்றனர் என தெரிவித்த முதல்வர், அ.தி.மு.க.,வினர் கொள்கையில் பிடிப்புடன் இருப்பவர்கள் எனவும், தமிழகத்திற்கு யார் நன்மை செய்கிறார்களோ அவர்களை நாங்கள் ஆதரிக்கிறோம் எனவும், யார் நல்லது செய்யவில்லையோ அவர்களை எதிர்க்கின்றோம் எனவும் தெரிவித்தார்.
மக்கள் நல திட்டங்களை பெறுவதற்காக மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கின்றோம். காலத்திற்கு ஏற்றபடி சந்திரபாபு நாயுடுவும் பச்சோந்தி போல மாறிக்கொள்பவர் என தெரிவித்தார்.
பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவது குறித்து ஏன் தி.மு.க.,வினர் நேற்று சந்திரபாபு நாயுடுவிடம் கேட்கவில்லை என கேள்வி எழுப்பிய முதல்வர், துரைமுருகன் சட்டமன்றத்தில் இது பற்றி அடிக்கடி கேள்வி கேட்கிறார் எனவும், சந்திரபாபு நாயுடுவிடம் ஏன் நேரிடையாக கேட்கவில்லை எனவும் தெரிவித்தார்.
பாலாறு பாலைவனம் ஆகி வருகின்றது, தடுப்பணைகளை இடித்து விட்டு தமிழக மக்களுக்கு தண்ணீரை கொடுங்கள் என ஏன் தி.மு.க.,வினர் கேட்கவில்லை என தெரிவித்த முதல்வர், அதிகாரத்தைக் கைப்பற்றவே அவர்கள் நினைக்கிறார்கள் எனவும் மக்கள் நலனில் அக்கறை இல்லை எனவும் தெரிவித்தார்.
மேலும், சர்க்கார் திரைப்பட பேனரை அ.தி.மு.க.,வினர் கிழிக்கவில்லை என தெரிவித்த அவர், பொதுமக்கள் போராட்டம் நடத்தியவர்களுடன் இணைந்து கிழித்தார்கள் எனவும் தெரிவித்தார்.
அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தும் தி.மு.க.,வினர் இதுவரை எந்த ஆதாரத்தையும் கொடுக்கவில்லை என தெரிவித்த முதல்வர், நாங்கள் சொல்வதை ஊடகம் போடுவதில்லை எனவும், ஆனால் மற்ற கட்சியினர் சொல்வதை ஊடகங்கள் பெரிதாக போடுகின்றீர்கள் எனவும் தெரிவித்தார்.
டெங்கு
டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலைத் தடுக்க அரசு தேவையான முன்னச்செரிக்கை எடுத்து வருகிறது என தெரிவித்த அவர், பொதுமக்களும் சுற்றுபுறத்தைக் தூய்மையாக வைக்க வேண்டும் எனவும், காய்ச்சல் வந்தவுடன் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தி இருப்பதாகவும், ஆனால் மக்கள் அலட்சியமாக இருப்பதால் காய்ச்சல் பரவுகின்றது எனவும் தெரிவித்தார்.
கமல் 64 வயசு வரை திரைப்படத்தில் நடித்து விட்டு இப்பொது அரசியல் நாடகம் ஆடுகின்றார் எனவும், 40 ஆண்டுகள் நடித்த கமலை மக்கள் ஏற்றுக்கொள்ள வில்லை என தெரிவித்தவர், சினிமா துறையில் கமலுக்கு மக்கள் ஓய்வு கொடுத்துவிட்டார்கள் எனவும் தெரிவித்தார்.
சபரி மலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் தமிழக பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது கேரள காவல் துறையின் பொறுப்பு என தெரிவித்த அவர், விவசாய நிலங்களில் டவர் லைன் அமைப்பது தொடர்பாக மின்வாரிய துறை அமைச்சர் பேசி வருகின்றார் எனவும், தேவையான இழப்பீட்டை வழங்கி மின்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
சர்கார் பட பிரச்சினை சுமூகமாக முடிந்துவிட்டது என தெரிவித்த அவர், இனி இதை ஊடகங்கள் பெரிது படுத்த வேண்டாம் எனவும் தெரிவித்தார். திரைப்படத்திற்கு 900 கோடி வரை எடுக்க செலவு செய்கின்றனர், அந்த பணம் திரையுலகினருக்கு எப்படி வருகின்றது என கேள்வி எழுப்பிய முதல்வர், 100 ரூபாய் டிக்கெட்டை 1000 ரூபாய்க்கு விற்று ரசிகர்களின் ரத்தத்தை திரையுலகினர் உரிஞ்சுகின்றார்கள் எனவும் தெரிவித்த முதல்வர், அதிக விலைக்கு டிக்கட் விற்பதை ஏன் ஊடகங்களில் செய்தி போடுவதில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.
இந்த விவகாரத்தில் அரசு சார்பில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது என தெரிவித்த முதல்வர், சில நடிகர்கள் விலையில்லா பொருள் குறித்து தவறான தகவலை பரப்பி வருகின்றனர் என்றார்.
இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் உறவினர்கள் கூட விலையில்லா பொருட்களை வாங்கி இருக்கின்றனர் எனவும், அந்த பட்டியலை நாங்கள் எடுத்து வைத்திருக்கின்றோம் எனவும் முதல்வர் தெரிவித்தார்.
விலையில்லா திட்டங்கள் கொடுப்பதால் தான் உயர்கல்வியில் தமிழகம் சிறந்து 46.8 சதவீதமாக விளங்குகின்றோம் எனவும், குறைந்த கட்டணம் என்பதால் தமிழகத்தில் உயர்கல்வி படிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.
படத்திற்கு கோடி கோடியாக வாங்கும் திரையுலகத்தினர் மக்களுக்கு என்ன செய்திருக்கின்றனர் என கேள்வி எழுப்பிய முதல்வர் திரையுலகமாக இருந்தாலும், அரசியலாக இருந்தாலும் கடுமையாக உழைக்க வேண்டும் என தெரிவித்தார்.
கமல் படத்திற்கு பிரச்சனை வந்த போது இந்த நாட்டை விட்டு போகிறேன் என்று சொன்னார். இவர் மக்கள் பிரச்சினைக்கு என்ன தீர்வை கண்டுவிடுவார் என கூறிய முதல்வர், தனது பிரச்சனையை தீர்க்க முடியவில்லை என்று பயந்து போனவர், மக்கள் பிரச்சனையை எப்படி தீர்ப்பார் எனவும் கேள்வி எழுப்பினார்.
இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது ஜனநாயக படுகொலை என தெரிவித்த முதல்வர், இலங்கையில் உள்ள தமிழக மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர் எனவும், மத்திய அரசு அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.