கோவை : மேட்டுப்பாளையம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான அரசுப் பேருந்தின் சக்கரங்கள் கழன்று ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை : மேட்டுப்பாளையம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான அரசுப் பேருந்தின் சக்கரங்கள் கழன்று ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று மதியம் அரசுப் பேருந்து ஒன்று பில்லூர் டேம் செல்வதற்காக காரமடை - வெள்ளியங்காடு சாலை வழியே சென்று கொண்டிருந்தது. ஓட்டுநர் சார்லஸ் என்பவர் இயக்கி வந்த இந்த பேருந்தில் 44 பேர் பயணித்தனர். தாயனூர் அருகே தோட்டப்பிரிவு என்ற இடத்தில் பேருந்து வந்த போது ஓட்டுநரின் கட்டுபாட்டினை இழந்து தாறுமாறாக ஓடியது. பேருந்தினை கட்டுப்படுத்த ஓட்டுநர் முயற்சித்த போது, பேருந்தின் முன் சக்கரம் கழன்று அருகில் இருந்து விவசாய நிலத்தில் ஓடியது. பின்னர், பேருந்து சாலை ஓரத்தில் இருந்த விவசாய நிலத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது.
இதில், பேருந்தில் பயணித்த ஜந்து பெண்கள் உட்பட 7 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர், காயமடைந்த அனைவரும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினர். இந்த விபத்து குறித்து காரமடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மலைப்பாதையில் இயக்கப்படும் இந்த அரசுப் பேருந்து மலை மீது செல்லும் போது, இந்த விபத்து ஏற்பட்டிருந்தால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும் என பயணிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். மலைப்பாதையில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் உரிய பராமரிப்புடன், தரம் உறுதி செய்த பின்னரே இயக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.