கோவை: கோவை மாவட்டம் கணபதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கொலையாளி காவல்நிலையத்தில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கோவை : கோவை மாவட்டம் கணபதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கொலையாளி காவல்நிலையத்தில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கணபதி அருகே உள்ள சுப்பநாயகன்புதூரைச் சேர்ந்தவர் பூபாலன் என்பவர் மகன் பிரவீன் குமார் (25). வெல்டிங் தொழிலாளியான இவர், கடந்த 5-ம் தேதி பதிகவுண்டர் தோட்டம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, இரும்பு கம்பியால் தாக்கியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டு கிடந்தார். சரவணம்பட்டி போலீசார் இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், நல்லாம்பாளையம் பாலாஜி நகரைச் சேர்ந்த முருகேசன் மகன் சிவபிரகாஷ் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

அப்போது, கொலையாளி சிவப்பிரகாஷ் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:- பிரவின் எனது நண்பர் நாங்கள் அடிக்கடி மது குடிப்போம். இருவரும் அடுத்தடுத்த வீதியில் வசித்து வந்தோம். கடந்த 5-ம் தேதி நானும், அவனும் காந்திபுரத்தில் மது குடித்துவிட்டு சினிமா பார்த்தோம். படம் முடிந்த பின்னரும் மது குடித்துவிட்டு இரவில் சுற்றிக்கொண்டிருந்தோம். அப்போது, பிரவீன் என்னை திருடன், ரவுடி என கேவலமாக பேசினான். என் மனைவியை மிகவும் கேவலமாக திட்டினான். நீ அப்படி பேசுவது எனக்கு எரிச்சலாக இருக்கிறது, என்னுடன் மது குடித்துவிட்டு என் மனைவியை பற்றி கேவலமாக பேசுகிறாயா என கண்டித்தேன். ஆனால், அவன் மது போதையில் மேலும் கேவலமாக பேசினார்.
நான் அவனை வீட்டுக்கு போலாம் என கூறி அழைத்து சென்று செல்லும் வழியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் பைக்கை நிறுத்தச் சொன்னேன். அவன் நிறுத்தியதும் ரோட்டில் கிடந்த இரும்பு கம்பி மற்றும் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டிக் கொன்றேன். பின்னர் அவரது பைக்கை எடுத்துக்கொண்டு தப்பினேன். நான் அவருடன் வெளியே சென்ற தகவல் போலீசுக்கு தெரிந்து விட்டது. என்னால் வேறு எங்கும் தப்பிச் செல்ல முடியவில்லை. மாட்டிக்கொண்டேன், என்றார்.
இந்த வழக்கில் சிவப்பிரகாசத்திற்கு உதவிய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். சிவப்பிரகாசம் மீது துடியலூர், சரவணம்பட்டி பகுதியில் அடிதடி மோதல், திருட்டு வழக்கு உள்ளது. ரவுடியான சிவப்பிரகாசம் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.