கோவை : தேசிய ஃபவுண்டரி மாநாடு வரும் 16 மற்றும் 17-ம் தேதிகளில் கோவையில் நடக்கிறது.
கோவை : தேசிய ஃபவுண்டரி மாநாடு வரும் 16 மற்றும் 17-ம் தேதிகளில் கோவையில் நடக்கிறது.
இது தொடர்பாக தேசிய ஃபவுண்டரி மாநாட்டு நிகழ்ச்சிக்கான தலைவர் ஆர். சரவணன் கூறியதாவது :- 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த தேசிய ஃபவுண்டரி மாநாட்டில் சிறந்த பயிற்சிகள் அளிக்கப்படும். இதில், இந்தியாவில் இருக்கும் முதன்மையான ஃபவுண்டரி ஆலைகளைச் சேர்ந்தவர்களே கலந்து கொள்வார்கள். சிறந்த பயிற்சி, புதுமையான கண்டுபிடிப்புகள், யோசனைகள் மற்றும் அனுபவங்களை பரிமாறுதல், தொழில்நுட்பம் மற்றும் ஃபவுண்டரி தொழிலில் இருக்கும் சமூக பிரச்சனைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும்.

தொழில் நகரமாக கோவை மாவட்டம் திகழ்வதற்கு ஃபவுண்டரி தொழில்களே காரணம். நாட்டிலேயே சுமார் 600-க்கும் மேற்பட்ட ஃபவுண்டரி யூனிட்டுகளை இங்கு கொண்டிருக்கிறது. மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்திற்காக, எளிய முறையில் தொழில் செய்தல், முதலீடுகள் மற்றும் தயாரிப்பிற்கான அந்நிய முதலீட்டைப் பெறும் நடைமுறை தளர்த்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், மேக் இன் இந்தியா திட்டத்தில் ஃபவுண்டரி தொழில் முக்கிய பங்காற்றும். கடந்த சில ஆண்டுகளாக இருந்த 5-7 சதவீத ஃபவுண்டரி தொழிலின் வளர்ச்சி, 13-14 சதவீதம் வரை எதிர்காலத்தில் அதிகரிக்கும்.
இந்த மாநாட்டின் நோக்கம் 'முன்னோக்கி செல்லுதல்' என்பதாகும். திட்டமிடுதல், இலாபநோக்கு, திறன் மேம்பாடு, ஆட்டோமெஷன் மற்றும் தொழில்நுட்பம் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது. மாநாட்டின் முதல் நாளில் அனைத்து பொது விவகாரங்கள் பற்றியும், 2-வது நாளில் பாதுகாப்புத்துறை, ரயில்வேத்துறை, பொருட்களை கையாளுதல், திறன் மேம்பாடு, தொழில் 4.0 போன்றவை குறித்து விளக்கப்பட இருக்கிறது. அதோடு, இரும்பு காஸ்டிங், அலுமினிய காஸ்டிங்ஸ், மற்றும் எஃகு காஸ்டிங் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேலும், 3டி பிரிண்டிங், டிஜிட்டல் ரேடியோகிராபி, வெல்டிங் தொழில்நுட்பம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப முறைகள் பற்றி விவரிக்கப்படுகிறது. இந்த மாநாட்டில், இந்தியா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, தாய்லாந்து உள்ளிட்ட 49 நாடுகளைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.