கோவை: விசாரணை ஆணையம் சமர்ப்பிக்கும் அறிக்கை மீது அரசுகள் நடவடிக்கை எடுக்காததால், விசாரணை ஆணையம் மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பதாக கோவையில் ஜல்லிக்கட்டு வன்முறை விசாரணை ஆணையத்தின் தலைவர் ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கோவை: விசாரணை ஆணையம் சமர்ப்பிக்கும் அறிக்கை மீது அரசுகள் நடவடிக்கை எடுக்காததால், விசாரணை ஆணையம் மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பதாக கோவையில் ஜல்லிக்கட்டு வன்முறை விசாரணை ஆணையத்தின் தலைவர் ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு ஆணையத்தின் தலைவரும், மேற்கு மண்டல கூட்டுறவு முறைகேடுகளை விசாரிக்கும் ஆணையத்தில் தலைவரான ராஜேஸ்வரன் கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மேற்கு மண்டலத்தில் நடக்கும் கூட்டுறவு சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்க உள்ளேன். முதற்கட்டமாக கோவையில் மூன்று நாட்கள் விசாரணை மேற்கொள்ள வந்துள்ளேன்.
கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இருந்து 247 மனுக்களும் நீதிமன்ற உத்தரவுப் படி ஒரு வழக்கும் என மொத்தம் 248 வழக்குகளை விசாரிக்க உள்ளேன். கூட்டுறவு சங்கம் தொடர்பான வழக்குகள் விரைந்து முடிக்கப்படும்." என்றார்.
ஜல்லிக்கட்டு வன்முறை குறித்த விசாரணை ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு, "மதுரையில் டிசம்பர் மாதத்தில் விசாரணை முடிவு பெறும். இன்னும் 6 அல்லது 7 மாதங்களில் ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பான விசாரணை முழுவதும் முடிவு பெற்று ஆணையத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். இது தொடர்பாக, 1,956 சாட்சியங்களை விசாரிப்பதால் கால அவகாசம் தேவைப்படுகிறது.
விசாரணை ஆணையத்தை ஒரு சாரர் கண்துடைப்பாக நினைக்கின்றனர். விசாரணை ஆணையம் சமர்ப்பிக்கும் அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமை, அவர்கள் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தான் இவ்வாறு மக்கள் நினைக்கின்றனர்." என்றார்.