நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையில் அமைந்துள்ள கண்ணாடி மாளிகை சீரமைப்பு பணிகள் இழுத்தடிக்கப்பட்டு வருவதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையில் அமைந்துள்ள கண்ணாடி மாளிகை சீரமைப்பு பணிகள் இழுத்தடிக்கப்பட்டு வருவதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ராஜ்பவன் மாளிகை செல்லும் சாலையோரத்தில் ஒரு கண்ணாடி மாளிகை அமைக்கப்பட்டது. இந்த கண்ணாடி மாளிகை முறையாகப் பராமரிக்கப்படாத நிலையில், அடிக்கடி கண்ணாடிகள் விழுந்து வந்ததால் பாதுகாப்பு கருதி கண்ணாடி மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டது. எனினும், தொடர்ந்து கண்ணாடி மாளிகை புதுப்பிக்கப்படாமல் இருந்ததால், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

கண்ணாடி மாளிகையை சீரமைக்க உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி வந்த நிலையில், ஏற்கனவே இருந்த கண்ணாடி மாளிகை அகற்றப்பட்டு, ரூ. 2.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிதாக கண்ணாடி மாளிகை அமைக்கும் பணிகள் மலர் கண்காட்சிக்கு முன்பு தொடங்கப்பட்டது. முதலமைச்சர் வருகையையொட்டி அவசரகதியில் பணிகள் தொடங்கப்பட்டதால், பணியில் தரம் இல்லாமல், மழையின் போது கண்ணாடி மாளிகையில் நீர் ஒழுகியதால் தண்ணீர் நிரம்பி சுற்றுலாப் பயணிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பின், சுற்றுலாப் பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டு, மீண்டும் சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
மேலும், இரண்டாவது சீசனுக்கு சுற்றுலாப் பயணிகள் பார்வையிட திறக்கப்படும் என தோட்டக்கலை துறையினர் தெரிவித்தனர். தற்போது, இரண்டாவது சீசன் முந்த நிலையில் இப்பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது. இதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் கண்ணாடி மாளிகையில் உள்ள மலர்களை ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, பணிகள் நடந்து வருவதாகவும், விரைந்து முடிந்துவிடும் என்று தெரிவித்தனர்.