நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோக்கால் பகுதியை சேர்ந்த கோத்தாஸ் என்ற பழங்குடியின மக்கள் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுக்கள் வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடுவது பல்வேறு தரப்பினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோக்கால் பகுதியை சேர்ந்த கோத்தாஸ் என்ற பழங்குடியின மக்கள் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுக்கள் வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடுவது பல்வேறு தரப்பினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது பட்டாசுக்கள் தான்.இந்த நாள் எப்பொழுது வரும் என சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலத்த எதிர்பார்ப்புகளுடன் இருந்து வருகின்றனர்.ஆனால் இந்த நாளில் நீலகிரியில் உள்ள ஆதிவாசி மக்களில் ஒரு பிரிவினர் வனவிலங்குகளின் நலன் கருதி பட்டாசுக்கள் வெடிக்காமல் தியாகம் செய்வது அனைத்து தரப்பினர் மத்தியிலும் வரவேற்பை பெற்று வருகிறது.

நீலகிரி மாவட்டம் தென்னிந்தியாவின் முக்கியமான வன பகுதியாக உள்ளது.இந்த வனப்பகுதியில் புலி,சிறுத்தை,யானை,மான்,கரடி போன்ற பல்வேறு விலங்குகள் உள்ளது. அதேபோல இந்த மாவட்டத்தில் பல்வேறு பழங்குடியின மக்களும் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.இதில் கோக்கால் பகுதியை சேர்ந்த கோத்தாஸ் என்ற பழங்குடியின மக்கள் ஆண்டுதோறும் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக தீபாவளியன்று பட்டாசுக்கள் வெடிக்காமல் தீபாவளியை இயற்கையான முறையில் கொண்டாடி வருகின்றனர்.இவர்கள் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்பதற்காகவும் காற்று மாசுக்கள் ஏற்படுத்தி இயற்கையை கெடுத்து விடக் கூடாது என்பதற்காகவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகள் வெடிக்காமல் தங்களது மகிழ்ச்சியை தியாகம் செய்து வருகின்றனர்.

அதேபோல இந்த கிராமத்தில் இயற்கைக்கு மாறாக எந்த செயலையும் தாங்கள் செய்வதில்லை என்றும் குறிப்பாக இறைவழிபாட்டில் கூட இயற்கையை மட்டுமே நம்புவதாகவும் தெரிவித்தனர்.அதேபோல பட்டாசுகள் வெடித்து வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி தாங்கள் மகிழ்ச்சி கொண்டாட விரும்பவில்லை எனவும் தெரிவித்தனர்.
அதிகம் படித்த நகர்ப்புற வாசிகள் கூட தங்கள் மகிழ்ச்சிகளை மட்டுமே கொண்டாடி வரும் சூழலில் படிப்பறிவற்ற ஆதிவாசி மக்கள் இயற்கைக்காக தங்களது மகிழ்ச்சியை தியாகம் செய்வது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.